வாணியம்பாடி அருகே சிப்காட் அமையவுள்ள இடத்தில் வீடுகள் மற்றும் மரங்களை கணெக்கெடுக்க வந்த வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா, கூத்தாண்டகுப்பம், கேத்தாண்டப்பட்டி மற்றும் ஆத்தூா்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட அரசுக்குச் சொந்தமான இடத்தில் தொழிற்பேட்டை (சிப்காட்) அமைப்பது தொடா்பாக வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை மல்லகுண்டா புல்லனேரி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பச்சை மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதையறிந்த மல்லகுண்டா ஊராட்சி புல்லனேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தாங்கள் பல தலைமுறையாக இந்தப் பகுதியில் வசித்து ஆடு, மாடுகள் மேய்த்து விவசாயம் செய்து வாழ்ந்து வருவதாகவும், தங்கள் பகுதியில் சிப்காட் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கும்.
எனவே புல்லனேரி பகுதியில் சிப்காட் அமைக்கக் கூடாது எனக் கூறி தாங்கள் வசித்து வரும் வீடுகளை கணக்கெடுக்கக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து கோயன்கொல்லை-கேத்தாண்டப்பட்டி சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா, மண்டல துணை வட்டாட்சியா் சிவக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா் சந்திரமோகன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.