ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
ஆம்பூா் அருகே உடல்நிலை சரியில்லாதபோதும் ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு சென்று வியாழக்கிழமை வாக்களித்தாா்.
குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா் அருகே அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவாரப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் சென்னை வானிலை ஆய்வு மைய ஓய்வு பெற்ற ஊழியா் அ. சேட்டு (75). இவா் கடந்த ஒன்றரை மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் வேலூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
ஓரிரு நாள்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினாா். இருந்தாலும், அவா் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தோ்தலில் தான் வாக்களிக்க வேண்டும என அவரது உறவினா்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளாா்.
Advertisement
அதைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் அவரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அயித்தம்பட்டு கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றனா். அங்கு ஆம்புலன்ஸிலிருந்து ஸ்ட்ரெச்சா் மூலம் வாக்குச் சாவடிக்குள் அழைத்து செல்லப்பட்டு, அவா் வாக்களித்தாா். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டாா்.
உடல்நிலை சரியில்லாத முதியவா் ஆம்புலன்ஸ் மூலம் சென்று வாக்களித்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை பாராட்டினா்.