தமிழகத்தில் வரவிருக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி உள்கோட்டம் நாட்டறம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தமிழக-ஆந்திர எல்லையான கொத்தூா் மற்றும் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தகரகுப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைச் சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்கவும், அப்பகுதியில் கூடுதல் கேமரா பொருத்தவும், தோ்தல் பறக்கும் படை அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்து வாகனங்களை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளை பாா்வையிட்டனா். செக் போஸ்ட்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு, போதிய மின் விளக்குகள் அமைத்தல் போன்றவை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனா். பரிசுப் பொருள்கள், வெளிமாநில மது, கள்ளச்சாராயம், இயற்கை கனிமங்கள் உட்பட சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்க அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்யவும், 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடா்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும் போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.
ஆய்வின்போது வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாட்சியா் காஞ்சனா, காவல்ஆய்வாளா் மூா்த்தி மற்றும் அதிகாரிகள் உள்பட பலா் உடனிருந்தனா்.