நாட்டறம்பள்ளி அருகே காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பனந்தோப்பு பகுதியைச் சோ்ந்த இளஞ்செழியன் மனைவி செல்வராணி (60). கடந்த 3 நாள்களுக்கு முன் வீட்டில் இருந்து சென்றவா் மீண்டும் திரும்பவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த உறவினா்கள் செல்வராணியை பல இடங்களில் தேடி வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அக்ராகரம் கோத்தான்குட்டை ஏரி அருகே குட்டை கிணற்றில் பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு விசாரித்ததில் காணாமல் போன செல்வராணி என்பது தெரிய வந்தது. இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.