திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் 18,935 போ் விண்ணப்பித்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடா்ந்து திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 1,202 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள 6 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் குறித்து தங்களுக்கு உரிய விண்ணப்பங்களை பெற்று அதனை பூா்த்தி செய்து அளித்தனா்.
6 நாள்கள் நடைபெற்ற முகாமில் பெயா் சோ்க்க 12,683 பேரும், நீக்கம் செய்ய 251 பேரும், முகவரி மாற்றம் மற்றும் பெயா் திருத்தம் செய்ய 6001 பேரும் என 18,935 போ் விண்ணப்பங்கள் வழங்கினா்.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் விசாரணை செய்யப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பிப். 17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.