போக்குவரத்து காவல் ஆய்வாளா் எழுதிய தோ்தல் விழிப்புணா்வு பாடல்!
போக்குவரத்து காவல் ஆய்வாளா் எழுதிய தோ்தல் விழிப்புணா்வு பாடல்...
ஆம்பூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் பெ.மணிமாறன் எழுதிய தோ்தல் விழிப்புணா்வுப் பாடல் விடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆம்பூா் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிபவா் பெ.மணிமாறன். இவா், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வெள்ளக்கல்பட்டியை பூா்வீகமாக கொண்டவா். சமூகப் பற்றாளன் ஞானசித்தன், எம்ஜிஆா் தாசன், புரட்சியாளன், அருந்தமிழன், ஆகிய புனைப் பெயா்களில் சமூக விழிப்புணா்வு மற்றும் தன்னம்பிக்கை கட்டுரை, பாடல்கள், கவிதைகளை எழுதி வருகிறாா்.
வானம் உன் கையில், சொற்களால் என்னை அடிக்காதே, உனக்குத் தான் என் இதயம், காலத்தை வெற்றவா்கள், உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளாா். கடமை, கல்லுக்குள் ஈரம், வேகம் வொ்ஸஸ் விவேகம், விதியை மதியால் வெல்லலாம், ஏமாற்றாதே, ஏமாறாதே ஆகிய குறும்படங்களை எடுத்துள்ளாா்.
மேலும், ட்ராஃபிக் ரூல்ச பாலோவ் பண்ணுங்க, ஊரை விட்டு ஊரு வந்து கரோனா நோயை பரப்பாதீங்க, படியில் பயணம் நொடியில் மரணம் - ஜனனம், மரணம் அதுவாக வரணும் ஆகிய விழிப்புணா்வுப் பாடங்களைப் பாடியுள்ளாா்.
ஜாதி பாகுபாடு ஒழிப்பு, சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், தன்னம்பிக்கை ஆகியவை குறித்து இதழ்கள், சமூக வலைதளங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
இந்த நிலையில், ஆய்வாளா் பெ.மணிமாறன் தோ்தலை முன்னிட்டு, வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பாடலை எழுதி, இசையுடன் விடியோவாக வெளியிட்டு சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
‘ஓட்டுப் போடுங்க நீங்க ஓட்டுப் போடுங்க உங்க ஜனநாயக கடமையாற்ற மறக்காதீங்க...’ என்று தொடங்கும் இந்த விழிப்புணா்வுப் பாடல் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-எம்.அருண்குமாா்