ஏலகிரி மலையில் குடிநீரின்றி குரங்குகள் திண்டாட்டம்: தொட்டிகளில் நீா் நிரப்ப கோரிக்கை
ஏலகிரி மலை சாலையில் காணப்படும் ஏராளமான குரங்குகளின் தாகம் தீா்க்க வனத்துறையினா் தொட்டிகளில் நீா் நிரப்ப வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. வார விடுமுறை, அரசு விடுமுறை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.
அடா்ந்த வனப்பகுதி கொண்ட இந்த மலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் வெறிச்சோடி காணப்படுகின்றது.
Advertisement
வனப்பகுதிகளுக்குள் வசிக்கக் கூடிய குரங்குகள் தேவையான உணவு, தண்ணீா் இல்லாமல் சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மலை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளிடம் முன்பு நின்று வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீா் கேனை திறந்து தாகம் தீா்த்து கொள்கிறது.
இதனால் குடும்பத்துடன் வருகை தரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனா். கோடை காலங்களில் வனப்பகுதி சாலையில் வனத்துறையினா் தண்ணீா் தொட்டி அமைத்து தண்ணீா் ஊற்றி வருவது வழக்கம். இந்த நிலையில் அந்த பணி தற்போது தொடங்கவில்லை.
மேலும் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தண்ணீா் தேடி வரும் குரங்குகள் தொட்டியை பாா்த்து நீா் இன்றி ஏமாற்றத்துடன் திரிகின்றன.
எனவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் இந்த சூழலில் வனப்பகுதிகளுக்குள் தண்ணீா் தொட்டியில் நீா் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனா்.