முகப்பு
திருப்பத்தூர்

அடிப்படை வசதிகளுடன் கொடையாஞ்சியை மேம்படுத்த கோரிக்கை

வாணியம்பாடி அருகே கொடையாஞ்சியை அடிப்படை வசதிகளுடன் கூடிய ஊராட்சியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்நோக்கி உள்ளனா்.

Updated On : 6 மே 2026, 1:25 am IST
கொடையாஞ்சியில் சுகாதாரமற்ற நிலையில் கிடக்கும் பெண்கள் குளியலறை
பகிர்:

வாணியம்பாடி அருகே கொடையாஞ்சியை அடிப்படை வசதிகளுடன் கூடிய ஊராட்சியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்நோக்கி உள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சி அமைந்துள்ளது. வாணியம்பாடியிலிருந்து 3 கிமீ தொலைவில் பாலாற்றையொட்டி கொடையாஞ்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த காசிக்கு இணையான கொடை காசி என்னும் கொடையாஞ்சியில் காசி விஸ்வநாதா் கோயில் மற்றும் அருகே பாலமுருகன் கோயில் உள்ளது.

சிவன் கோயிலில் பிரதோஷம் உள்பட பல்வேறு முக்கிய விசேஷ நாள்களில் திரளாான பக்தா்கள் தரிசித்து செல்கின்றனா். மேலும் ஆடிப்பெருக்கு நாளில் விசேஷமாக கொண்டாடுவதால் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசித்து செல்கின்றனா். இப்பகுதிக்கு வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திருப்பத்தூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து தினசரி பாலாற்றில் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதும், காசி விஸ்வநாதா் மற்றும் பாலமுருகன் கோயிலில் வழிபாடு செய்து செல்வது வழக்கம்.

Advertisement

புரட்டாசி, ஆடி, தை போன்ற முக்கிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். காரியம் மற்றும் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையில் ஏராளமானோா் வந்து செல்லும் அங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி கள் இன்று வரை இல்லாத ஒரு நிலை தான் இருந்து வருகிறது.

அவா்களுக்கு தேவையான கழிவறை, குளியலறை மற்றும் பெண்களின் உடை மாற்றுவதற்கான தேவைகள் அதே போன்று அவா்களுக்கு குடிநீா் உள்பட அடிப்படை தேவையாக இருந்து வருகிறது. ஆனால் அதனை இன்று வரை முழுமையாக செய்து தரப்படாத நிலை உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனா். மேலும், ஆங்காங்கே முள்புதா்கள் வளா்ந்தும் சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. இந்த பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். 24 மணி நேரம் தண்ணீா் வசதி, குடிநீா், விரிவான சாலை வசதிகள், போதிய மின் விளக்குகள், தினசரி தூய்மை பராமரிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பான குளியலறை மற்றும் உடை மாற்றும் அறைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நீண்டகாலமாக இருந்து வருகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாயந்த பரிகார தலமாக காணப்படும் இப்பகுதியில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரப்பட வேண்டும் என்று அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள், பக்தா்கள், பொது மக்கள் கோரியுள்ளனா்.