காட்சிப் பொருளான தானியங்கி சிக்னல்கள்
பொன்னேரியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் அமைக்கப்பட்ட
பொன்னேரியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்கள் கடந்த 3 ஆண்டுகளாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சிப் பொருளாக உள்ளன.
இதனை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பொன்னேரியில் உள்ள தாயுமான் செட்டித் தெரு, புதிய தேரடித் தெரு, ஹரிஹரன் பஜார் சாலை, செங்குன்றம் சாலை ஆகியன எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது.
மேலும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, எண்ணூர் துறைமுகம், கப்பல் கட்டும் தளம், எண்ணூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், சி.பி.சி.எல். பெட்ரோலிய நிறுவனம், திருவொற்றியூர், மணலி, கொண்டக்கரை, இடையஞ்சாவடி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கிடங்குகளுக்கு செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் சரக்குப் பெட்டக லாரிகள், கனரக வாகனங்களும் பொன்னேரி வழியாகத்தான் சென்று வருகின்றன.
இதன் காரணமாக தாயுமான் செட்டி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, செங்குன்றம் சாலை ஆகியவற்றில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும். இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்குச் செல்வோர், அவசரமாக அரசு மருத்துவமனைக்குச் செல்வோர், ஆம்புலன்ஸ்கள் மேற்கண்ட சாலைகளை உடனடியாக கடந்து செல்ல முடிவதில்லை.
இந்த போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பழைய, புதிய பேருந்து நிலையச் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை இணையும் இடம், ஹரிஹரன் பஜார்-செங்குன்றம் சாலை இணையும் இடம் ஆகியவற்றில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி சிக்னல்கள் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தானியங்கி சிக்னல்கள் அமைத்து 3 ஆண்டுகளாகியும் இன்னமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் மேற்கண்ட சாலைகளில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த தானியங்கி சிக்னல்களை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்து போக்குவரத்து நெரிசலை தீர்க்க திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.