குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னேரி அருகே, குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அருகே, குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக, குடிநீர் முற்றிலுமாக விநியோகம் செய்யப்படாததால், பெரிதும் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், இது குறித்து மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், இதன்பேரில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அவர்கள், சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி கையில் காலிக் குடங்களுடன் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.