சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் அருகே, சாலையை ஆக்கிரமித்து சிட்கோ நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே, சாலையை ஆக்கிரமித்து சிட்கோ நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்-சென்னை நெடுஞ்சாலையில் காக்களூரில் உள்ளது சிட்கோ தொழிற்பேட்டை. இந்த தொழிற்பேட்டை வளாகத்தை ஒட்டியுள்ள ராமாவரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை ஆக்கிரமித்து, சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்துக்குச் சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சுற்றுச் சுவர் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதை அறிந்த கிராம மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இப்பகுதி மக்கள் ராமாவரம் கிராமத்திலிருந்து திருவள்ளூர் செல்வதற்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலையைப் பயன்படுத்தி
வருகிறோம்.
இதை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் எழுப்புவதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதோடு, திருவள்ளூருக்குச் செல்ல வேண்டும் என்றால் புட்லூர் வழியாக 4 கி.மீ. தொலைவு சுற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பள்ளி மாணவ, மாணவியரும், கால்நடை விவசாயிகளும் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். சாலையை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் எழுப்ப முயற்சிக்கும் சிட்கோ நிர்வாகத்தினர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், சிட்கோ நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.