திருவள்ளூர் பகுதியில், கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையிலும், கடும் வெப்பத்தை தாங்கி வளர்ந்த ஈச்ச மரங்கள் செழிப்பாகவும், கண்ணைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் குலைகுலையாய் காய்கள் காய்த்தும் பார்வைக்கு அழகாகக் காட்சியளிக்கின்றன.
திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலை, செங்குன்றம் சாலை, கனகம்மாசத்திரம் சாலை, கடம்பத்தூர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலையோரங்களில் ஈச்சமரங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வளர்ந்த நிலையில் அணிவகுத்து நிற்கின்றன. அதேபோல், இப்பகுதியில் உள்ள ஏரிக் கரையோரங்களிலும், வரத்துக் கால்வாய் ஓரங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகளிலும் ஈச்ச மரங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
தென்னை, பனை போல் ஈச்ச மரங்கள் வளர்ந்திருந்தாலும், முள் போன்ற தன் ஓலைகளால் அதிலிருந்து மாறுபட்டு காணப்படுகின்றன. தற்போது கொளுத்தும் கோடை வெயிலில் பயிர்கள் வாடி வருகின்றன. ஆனால், ஈச்ச மரங்கள் கோடைக் கால வெப்பத்தையும் தாங்கி கம்பீரமாய் வளர்ந்து நிற்பதோடு, கோடையிலும் பல்வேறு வகையான வண்ணங்களில் குலைகுலையாய் காய்கள் காய்த்து தொங்குகின்றன.
இதுகுறித்து, ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சம்பந்தம் கூறுகையில், திருவள்ளூர் பகுதியில் உள்ள ஏரிக் கரையோரம், ரயில்வே இருப்புப் பாதை ஓரம் மற்றும் சாலையோரங்களில் ஈச்ச மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. தற்போது சித்திரை மாதம் என்பதால் கோயில் திருவிழாக்களில் பெரும்பாலான பந்தல்களில் தோரணங்களாய் கட்டுவதற்கு ஈச்ச மரத்தின் காய்களை குலைகுலையாய் வெட்டிச் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, சிவப்பு நிறத்தில் பழம் போல் காணப்படும் ஈச்சங் காய்களை அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களும், வியாபாரிகளும் காத்திருந்து பறித்துச் செல்கின்றனர். இதன் மட்டை மற்றும் ஓலைகளைப் பறித்துச் செல்பவர்கள், இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பைகள், பாய்கள், துடைப்பம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தோட்டக்கலைத்துறை அலுவலர் முத்துதுரை கூறியதாவது:
ஈச்ச மரங்கள், பூக்கும் இனத்தைச் சேர்ந்த ஒரு பனைக் குடும்ப தாவரமாகும். இதன் மட்டை மூன்று மீட்டர் வரை நீளம் கொண்டு சற்றே வளைந்தவாறு இருக்கும். இதன் மட்டையிலும் இலைகளின் முனையிலும் முட்கள் காணப்படும். இதில் ஆண் ஈச்சம், பெண் ஈச்சம் என இருவகை மரங்கள் உண்டு.
இதில் ஆண்மரங்களில் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் பூக்கள் மட்டும் பூக்கும். பெண் மரத்தில் காய்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அவை பழுக்க ஆரம்பித்த பின்பு சிவப்பு வண்ணமடைந்து இறுதியில் பழுப்பு நிறத்தை அடையும். இதன் பழங்கள் மிகவும் சுவையுடையதாக இருக்கும். இதன் பிஞ்சுகள் முதலில் பச்சை, சிவப்பு அதைத் தொடர்ந்து மஞ்சள் என, அடுத்தடுத்து நிறம் மாறும் தன்மையுடையவை.
இந்த வகை மரங்கள் அதிக தண்ணீர் உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் விவசாயிகள் வளர்க்க விரும்புவதில்லை. ஆனால், ஆறு, குளம் மற்றும் ஏரிக் கரையோரங்களில் தானாகவே வளரும் தன்மை கொண்ட மரமாகும் . இவை பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம் ஆகிய இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன. அதேபோல், தமிழக -ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் இந்த மரங்களில் இருந்து, கள் மற்றும் பதநீர் இறக்கப்படுவதுடன் வெல்லமும் தயாரிக்கப்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.