மணல் குவாரியை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரிக்கு அனுமதி அளித்த நிலையில் அந்த
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரிக்கு அனுமதி அளித்த நிலையில் அந்த குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரைகளில் 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து குடிநீர் விநியோகித்து வருகிறது.
இந்த ஆழ்துளைக் கிணற்றினை நம்பி ஊத்துக்கோட்டை நகரம் மட்டும் அல்லாது அனந்தேரி, போந்தவாக்கம், பேரிவிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேலகாபுரம், நந்திமங்கலம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆரணி ஆற்றில் மணல் குவாரி தொடங்க கடந்த 20 ஆண்டுகளாக அரசு திட்டமிட்டும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக குவாரியை செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்து ஆரம்பகட்டப் பணிகளை தொடங்கி உள்ளது. இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வாரம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பாகவும் குவாரியை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனினும், மணல் குவாரி தொடங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மணல் குவாரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டை வியாபாரிகள் சங்கம் சார்பாக அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஊத்துக்கோட்டை பஜாரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் எதிரே உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசின் குவாரி அமைக்கும் நடவடிக்கையால் ஊத்துக்கோட்டை நகரில் வசிக்கும் 30 ஆயிரம் மக்கள் மற்றும் 15 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேலும், நிலத்தடி நீர் பாதிப்பால் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பிலான விவசாயம் முழுவதும் அழியும் என்றும் கண்டனம்
தெரிவித்தனர்.
அரசு இந்த குவாரியை மூடாவிட்டால் பெரிய அளவில் 15 ஊராட்சிகளும் இணைந்து அடுத்த கட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.