முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரியில் இருந்து மீஞ்சூருக்கு போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி

பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நகருக்கு போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On : 2 நவம்பர், 2018 at 4:14 AM
போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் சரக்கு வாகனத்தில் பயணிக்கும் தொழிலாளர்கள்.
பகிர்:



பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நகருக்கு போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்பட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மேலும், தலைமை அரசு மருத்துவமனையும் அமைந்துள்ளது. அதே போன்று பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. அத்துடன், மீஞ்சூரை அடுத்த கடலோரப் பகுதியான காட்டுப்பள்ளியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை, அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம், சமையல் எரிவாயு விநியோகிக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பேரஷன் நிறுவனம் ஆகியவை அமைந்துள்ளன. 
பொன்னேரி, மீஞ்சூர் நகர் பகுதிகளில் மட்டும் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக மீஞ்சூர், பொன்னேரிக்கு சென்று வருகின்றனர். போதிய பேருந்து வசதி இல்லை....: பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பணிமனையில் இருந்து நாள்தோறும் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்பதி, காளஹஸ்தி, கோயம்பேடு, திருவள்ளூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதே போன்று பொன்னேரியைச் சுற்றியுள்ள பழவேற்காடு, ஆரம்பாக்கம், கோளூர், அண்ணாமலைச்சேரி, தேவம்பட்டு, தேர்வாய் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
ஆனால், பொன்னேரியில் இருந்து நேரடியாக மீஞ்சூர் வரை பேருந்துகளை இயக்காமல், ஊரணம்பேடு, கடப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் இரண்டு பேருந்துகள் மட்டும் (குறைந்த அளவில்) மீஞ்சூர் வழியாக இயக்கப்படுகிறது. இதனால், பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் செல்லும் பொதுமக்களும் அங்கிருந்து இங்கு வருவோரும் தனியார் மேஜிக் வாகனங்களில் அதிக கட்டணம் அளித்தும், பாதுகாப்பற்ற முறையிலும் பயணம் சென்று வரும் நிலை உள்ளது. 
மேலும், போதிய பேருந்துகள் இயக்கப்படாததன் காரணமாக கட்டட வேலை உள்ளிட்டவற்றுக்குச் செல்லும் கூலி தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான நிலையில் பயணம் சென்று வருகின்றனர். 
எனவே, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி பொன்னேரி-மீஞ்சூர் வழித்தடத்தில் அதிக அளவு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.