திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பிருப்பதாக சு.வெங்கடேசன் பேச்சு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசியதாவது, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கும் தொகுதி மறுவரையறைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க பாஜக செய்திருக்கும் ஒரு சூழ்ச்சிதான்.
மகளிர் இடஒதுக்கீடு என்ற கேடயத்தைப் பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருகின்றனர். மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதனை இப்போதிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நிறைவேற்றலாம்.
Advertisement
Advertisement
இவர்கள் தொகுதி மறுவரையறை என்ற மிகுந்த சிக்கல் நிறைந்த பிரச்னையை, 50 ஆண்டுகளான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மீண்டும் ஆரம்பித்து, ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்று அரசியல் சாசனம் கூறுகிறது. அது ஒரு முக்கியமான கோட்பாடு. இன்னொரு புறம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அசமத்துவமான நிலை. இவை இரண்டுக்குமிடையில் ஒரு பெரிய முரண் இருக்கிறது. ஒரு பெரிய சவால் இருக்கிறது. இது இந்தியாவில் மிக முக்கியமான பிரச்னை.
இந்தப் பிரச்னையை, அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஒன்றுபட்ட ஓர் ஆலோசனையை உருவாக்கியபிறகு, அதனை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதன் மூலமாகவே இதனை நிறைவேற்ற முடியும்.
இது தென் மாநிலங்கள் மீது பாஜகவுக்கு இருக்கிற வஞ்சகம். குறிப்பாக, மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் தண்டனையும்தான் இது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் 21 லட்சம் வாக்குப்பதிவுகள்தான் கூடியிருக்கின்றன.
அதற்கு முன்பு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், 40 லட்சம் கூடியுள்ளது. அப்படி பார்க்கும்போது, முன்பு நடந்த தேர்தல்களில் 40 லட்சம் கூடியிருக்கிறது என்றால், இந்தத் தேர்தலில் வெறும் 21 லட்சம்தான் கூடியிருக்கிறது.
சதவிகித உயர்வுக்குக் காரணம் எஸ்ஐஆர். மற்றபடி, சராசரி உயர்வு அப்படியேதான் பிரதிபலித்துள்ளது.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. இயல்பாகவே, 3 அல்லது 4 அணிகள் போட்டியிடும்போது, ஆளுங்கட்சி அணியின் வாக்கு சதவிகிதம், வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கும். ஆகையால், வெற்றி மிக அதிகமாக கிடைக்கும். இந்த அணி மிகப்பெரிய வலுவான அணி " என்று தெரிவித்தார்.
Victory Prospects Favor the DMK Alliance: Su. Venkatesan MP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.