முகப்பு
திருவள்ளூர்

6 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத சிக்னல் விளக்குகள்..!

பொன்னேரி பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிக்னல் விளக்குகள் இதுவரையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல், விளக்குக் கம்பங்கள் சாய்ந்தும்

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

பொன்னேரி பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிக்னல் விளக்குகள் இதுவரையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல், விளக்குக் கம்பங்கள் சாய்ந்தும், உடைந்தும் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 பொன்னேரியில் 40-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்பட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.
 அதே போன்று, தாலுக்கா தலைமை அரசு மருத்துவமனை, பொன்னேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நான்கு தேசிய வங்கிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை அமைந்துள்ளன. பொன்னேரியில் உள்ள தாயுமான் செட்டித் தெரு, புதிய தேரடித் தெரு, ஹரிஹரன் பஜார் சாலை, செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும்.
 இந்நிலையில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை தவிர்ப்பதற்காக, அப்பகுதி வழியே செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் பொன்னேரி வழியாகச் செல்கின்றன.
 மேலும், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, எண்ணூர் காமராஜர் துறைமுகம், அதே பகுதியில் உள்ள தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம், எண்ணூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், சி.பி.சி.எல். பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் திருவொற்றியூர், மணலி, கொண்டக்கரை, இடையஞ்சாவடி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் கன்டெய்னர் கிடங்குகளுக்குச் செல்லும் கனரக வாகனங்களும் பொன்னேரி வழியாகத்தான் சென்று வருகின்றன.
 இதன் காரணமாக, தாயுமான் செட்டி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, செங்குன்றம் சாலை ஆகிய சாலைகளில், காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், அவசரமாக அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோர், மேற்கண்ட சாலைகளை உடனடியாக கடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
 காட்சிப் பொருளாய் சிக்னல் விளக்குகள்...: இந்நிலையில், பொன்னேரியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, அங்குள்ள பழைய பேருந்து நிலைய சந்திப்பு, புதிய பேருந்து நிலைய சந்திப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி சிக்னல் விளக்குக் கம்பங்களை பொன்னேரி போலீஸார் அமைத்தனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிக்னல் விளக்குக் கம்பங்கள் அமைத்து 6ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. இதனால், விளக்குக் கம்பங்கள் சாய்ந்தும், உடைந்தும், துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இவற்றை இனி பயன்படுத்தவும் முடியாத நிலையில் சேதமடைந்துள்ளன.
 சிக்னல் விளக்குகள் அமைத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததன் காரணமாக மேற்கண்ட சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில், பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
 எனவே, மேற்கண்ட பகுதிகளில் புதிதாக சிக்னல் விளக்குக் கம்பங்களை அமைத்து, உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். இதற்கு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து போலீஸார் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →