முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி ரயில் நிலையத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுமா? 

பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேரடி, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம்,

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:


பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேரடி, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், வேண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி புறநகர் மின்சார ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது பொன்னேரி ரயில் நிலையம். 
சென்னையை ஒட்டி, வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதியாக விளங்கும் பொன்னேரியில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த வாடகை, நல்ல குடிநீர், தூய காற்று மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள், இப்பகுதியில் அமைந்துள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்போர் அதிக அளவில் பொன்னேரி பகுதிக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். 
இதனால் இப்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதன் காரணமாக, பொன்னேரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் நிலையை எட்டியுள்ளது. பொன்னேரியில் என்.ஜி.ஓ. நகர், பாலாஜி நகர், மூகாம்பிகை நகர், சங்கர் நகர், பொன் நகர், சக்தி நகர், தசரதன் நகர், சாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. 
மேலும், இப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அத்துடன், கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்பட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. 
இந்நிலையில், பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் பல்வேறு அலுவல் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, சூலூர்பேட்டை, நெல்லூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். 
நகரப் பேருந்து இயக்க கோரிக்கை...: பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அதே போன்று புதிய பேருந்து நிலையம் செல்ல 1கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். 
ஆட்டோக்களில் அதிக கட்டணம்....: பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல ரூ.40, பழைய பேருந்து நிலையம் செல்ல ரூ.50 என ஆட்டோ ஒட்டுநர்கள் தங்கள் விருப்பம்போல் கட்டணம் நிர்ணயம் செய்து பயணிகளிடம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொன்னேரியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் சென்றுவருவதற்கான (ரிட்டன் டிக்கெட்) கட்டணம் ரூ. 20. ஆனால் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் ரயில் நிலையம் சென்று வருவதற்கு ரூ.100 செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். 
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, பொன்னேரி நகரில் சுழற்சி முறையில் இயங்கும் வகையில், பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரையில் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்துகளை இயக்க விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையாகும். 

முழு கட்டுரையைப் படிக்க →