முகப்பு
திருவள்ளூர்

ஆமை வேகத்தில் பூங்கா அமைக்கும் பணி..!

திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் அம்மா பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சிக் கூடம்

Updated On : 4 செப்டம்பர், 2018 at 2:27 AM
பூங்காவில் தரைப்பகுதி அமைப்பதற்காக கொட்டி வைக்கப்பட்ட மணல் மற்றும் கற்கள்.
பகிர்:


திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் அம்மா பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 
பூங்கா மற்றும் ஜிம்முக்கு ரூ.30 லட்சம்: ஒவ்வொரு கிராமத்திலும், இளைஞர்கள் மற்றும் முதியோர்களுக்கு பயனளிக்கும் வகையில், இளைஞர்கள் உடல் நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடமும், அதேபோல் முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நல்ல சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பூங்காவும் அமைக்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்காக அம்மா பூங்கா அமைக்க ரூ.20 லட்சமும், அதனுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. 
49 கிராமங்களில்... : அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 49 கிராமங்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஊராட்சி முகமைத் திட்டம் மூலம் நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில், அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ஊராட்சியில் 15 ஆயிரம் சதுர அடி முதல் 20 ஆயிரம் சதுர அடி வரை இடம் தேர்வு செய்து அமைக்க வேண்டும். 
இதற்காக, அம்மா பூங்காவிற்கு தலா ரூ.20 லட்சமும், பூங்காவோடு இணைந்த நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ரூ.10 லட்சமும் என இம்மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.14.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆமை வேகத்தில்... : இந்த பூங்காவில் சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அதோடு, இந்தப் பூங்காவில் பொதுமக்கள் மனதைக் கவரும் வகையில் பூஞ்செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல், ராட்டினம் உள்ளிட்ட உபகரணங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நடைபயிற்சி தளங்களில் பேவர் பிளாக்' கற்கள் இன்னும் பதிக்கப்படாமல் உள்ளன. அதேபோல், உடற்பயிற்சிக் கூடத்தில் விளையாட்டுக் கருவிகள் பொருத்தப்படவில்லை. இப்பகுதி கிராமங்களான வெங்கத்தூர், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் அனைத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் அரைகுறையாகவே உள்ளன. 
ஆமைவேகத்தில் நடைபெற்று வரும் பணிகளால் இத்திட்டம் நிறைவு பெறாமல் உள்ளது. 
அதனால் விரைவில் திட்டப்பணிகளை முடித்து பூங்காக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
70 சதவீதம் பணிகள்: இது குறித்து சமூக ஆர்வலர் மாக்கப்பா கூறுகையில், உடல் திறன், மனநலத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். 
அந்த வகையில் இளைஞர்கள் விளையாட்டில் முழுக் கவனத்தை செலுத்தும் வகையில் கிராமங்களில் விளையாட்டு மைதான வசதியில்லாத நிலையிருந்தது. 
இதனால், இளைஞர்கள் நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதைக் கருத்தில்கொண்டு கிராமங்களில் உடற்பயிற்சிக் கூடத்துடன் இணைந்த அம்மா பூங்கா அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. 
இத்திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு ஒருவரே ஒப்பந்தம் பெற்று, இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 70 சதவீத பணிகளை மட்டுமே முடித்துள்ளனர். இதுபோன்று காலதாமதம் செய்து வருவதால் திட்ட மதிப்பீடு உயர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. 
அதனால் விரைவில் இப்பணிகளை முடித்து பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
விரைந்து முடிக்க நடவடிக்கை....: இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பணிகள் முடிக்கப்பட்டு பூங்காக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், பல்வேறு கிராமங்களில் மணல் தட்டுப்பாடு காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 
எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.