FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!

உலகில் ஏற்பட்டு வரும் அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், மக்களிடையே பல்வேறு நோய்கள் குறித்தான புரிதல் அதிகரித்து வருகின்றன.

Updated On : 30 ஏப்ரல் 2026, 3:11 am IST
பகிர்:

உலகில் ஏற்பட்டு வரும் அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், மக்களிடையே பல்வேறு நோய்கள் குறித்தான புரிதல் அதிகரித்து வருகின்றன. கொத்துக் கொத்தாக கொடிய நோய்களுக்கு மக்கள் பலியான காலம் மாறி, இன்றைக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு, தடுப்பூசிகள், மருத்துவத்தில் அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற காரணங்களால் இன்று மனித இனம் காக்கப்பட்டுள்ளது. இதனால், மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்து வருகிறது.

1870-ஆம் ஆண்டில் 40 முதல் 50 ஆண்டுகளாக இருந்த மனிதனின் சராசரி ஆயுள்காலம் இப்போது 72-ஆக அதிகரித்திருக்கிறது. உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்தையும் சேர்ந்து பராமரிப்பதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழ முடியும் என்பதை முதுமை குறித்தான ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "அறிவியல்' என்ற இதழில், அண்மையில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில் "ஒருவர் ஆரோக்கியமாக நீண்ட நாள் உயிர் வாழ்வதற்குக் காரணம் சத்தான உணவை உட்கொள்ளுதல், அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல், தீயப் பழக்கங்களின்மை, தூய்மையான சுற்றுச்சூழல் மட்டும் காரணமல்ல, ஒருவரின் வலிமை உடலில் குன்றாமலிருந்து, நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு அவரது ரத்தத்தில் கலந்துள்ள மரபணுக்களும்தான் காரணம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மனிதனின் உயிரிழப்புக்கு இரண்டு காரணிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. முதலாவதாக வெளிப்புற காரணிகள் எனப்படும் தொற்றுகள், நோய்கள், விபத்துகள். இரண்டாவது உட்புற காரணிகள் எனப்படும், முதுமை, மரபியல், உடல்நடுக்கம், நினைவாற்றல் இழப்பு போன்ற மூளைச் சிதைவு நோய்கள்.

விபத்துகள், நோய்கள் மற்றும் பிற வெளிப்புறக் காரணிகளால் ஏற்படும் இறப்புகளைத் தவிர்த்து, ஒரு மனிதனின் ஆயுள்காலத்தில் சுமார் 55% பேர், அவரது மரபணுக்களின் அடிப்படையிலேயே நீண்ட நாள் உயிர் வாழ்வதாக அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. அதிக ஆண்டுகள் வாழ்ந்த மக்களின் மரபணுக்களை ஆராய்ந்தபோது, அவர்களின் மூதாதையர்களின் பாரம்பரிய மரபணுக்கள் மற்றும் மரபு வழித் தன்மைகள்தான் அவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வதற்குக் காரணமாக அமைந்துள்ளன என்பதை அந்த ஆய்வறிக்கை சுட்டியுள்ளது.

மனிதர்கள் நீண்ட நாள் உயிர் வாழவும், முதுமையைத் தடுக்கவும், உயிரியல் முதுமையியல் (பயோஜெரண்டாலஜி) எனப்படும் உயிரியல் செயல்முறைகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். டென்மார்க், ஸ்வீடன் நாடுகளில் 1870 மற்றும் 1935 ஆகிய காலங்களில் பிறந்து வளர்ந்தவர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் காலகட்டங்களில் பெரும்பாலானவர்கள் தொற்று நோய்கள், விபத்துகளால் அதிக அளவில் உயிரிழந்தது கண்டறியப்பட்டது.

பெரும்பாலான பங்கேற்பாளர்கள் 1870-1935 ஆண்டுகளுக்கு இடையே பிறந்தவர்கள். இந்தக் காலகட்டத்தில் தொற்று நோய்கள் மற்றும் விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் தொற்றுகள், வன்முறை மற்றும் விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் குறைந்து, நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர்களை ஆராய்ந்ததில் அவர்களின் மரபணுக்கள், அவர்களின் ஆயுள்காலத்தை அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புகள், முக்கியமான பொது சுகாதார தாக்கங்களைக் கொண்டுள்ளன என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புது தில்லியில் செயல்படும் ஃபோர்டிஸ் சி-டிஓசியின் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா, "உயிரியல் வயதாவதில் மரபியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், "வெளிப்புற காரணிகள்' விலக்கப்பட்டவுடன், மனித ஆயுட்காலத்தில் பாதி மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ஊட்டச்சத்தின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு, சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவை மரபணு தன்மைகளை மீறி உயிரியல் வயதாவதை விரைவுபடுத்தக் கூடும்' என்றார்.

மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையின், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் அவை சுரக்கும் ஹார்மோன்கள் (எண்டோகிரைனாலஜி) அகச்சுரப்பித் துறையின் குழுத் தலைவர்-மருத்துவர் அம்ப்ரிஷ் மிதல், "ஒருவர் நீண்ட நாள் உயிர் வாழ்வது என்பதானது சுற்றுச்சூழலும், பரம்பரையும் சமநிலை வகிப்பதைப் பிரதிபலிக்கும்' என்றார். மேலும் அவர் "மரபியல் ஆயுள்காலத்துக்கான பரந்த உச்ச வரம்பை வழங்குகிறது. அதே நேரத்தில், டிஎன்ஏ வரிசையை மாற்றாமல் மரபணுக்கள் செயல்படும் விதத்தில் ஏற்படும் மாற்றங்களும் (எபிஜென்டிக்ஸ்), வாழ்க்கை முறைகளும் ஒருவரின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, உடல் அமைப்பு என்பது நமது மூதாதையர்களின் பாரம்பரிய மரபணுக்கள், மரபுவழித் தன்மையைப் பொருத்தது. அதைத் தவறான மருத்துவ ஆலோசனைகள் மூலம் நம்மை நாமே சிதைத்துக் கொள்ளக்கூடாது.

பலருக்கு முதுமை என்பது நினைவாற்றலில் குறைபாடுகளை ஏற்படுத்தும். மறக்கப்பட்ட பெயர், பொருள்கள் வைக்கப்பட்ட இடம் நினைவில் இல்லாமை ஆகியன ஒரு சில எடுத்துக்காட்டுகள். முதுமையில் நினைவாற்றல் இழப்பு என்பது, மிகவும் தீவிரமான பிரச்னையாக மாறுகிறது. இருப்பினும், 80 வயதைக் கடந்த பலர், முதுமையிலும் சுறுசுறுப்பாகவும், நினைவாற்றலில் சிறந்து விளங்குவதையும், நுண்ணிய அறிவாற்றலுடன் இயங்குவதையும் காண முடிகிறது.

80 வயதுக்கும் மேற்பட்டு, தங்களைவிட 50 வயது குறைந்த இளைஞர்களைவிட அதிக சுறுசுறுப்பு, சிறந்த நினைவாற்றல், அறிவாற்றல், நுண்ணறிவுத் திறன் கொண்ட முதியவர்கள் "சூப்பர் ஏஜர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். தாங்கள் சார்ந்துள்ள துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு, அவ்வப்போது தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, இளைஞர்களுக்கு சவாலாக விளங்குகிறார்கள்.

லண்டனிலிருந்து வெளியாகும் "நேச்சர்' என்ற வார இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில், மூளையின் நினைவக மையத்துக்குள், புதிய செல்களை உற்பத்தி செய்வதுடன், கற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு முக்கியமான பகுதியான "ஹிப்போகேம்பஸ்' ஆற்று நீர் ஓட்டம் போல புதிய நரம்பணுக்களை (நியூரான்கள்) உற்பத்தியாக்குவதுதான் இதற்குக் காரணம் என்கிறது. ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமான இளம் நரம்பணுக்களை "ஹிப்போகேம்பஸ்' உருவாக்குகின்றன. அதிகரித்த நரம்பணு உருவாக்கம் காரணமாக மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டை இவர்கள் கொண்டிருப்பர். இந்த இளம் நரம்பணுக்கள் மூளையின் நெகிழ்வுத் தன்மையைப் பயன்படுத்தி வலுவான இணைப்புகளுக்கு வழிகோலுகின்றன. அதேசமயம், ஒரு தனித்துவமான "மீள்திறன் அடையாளம்' அவர்களின் திறனுடனான உயிர்வாழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது.

மேம்பட்ட ஒற்றை செல் மரபணு நுட்பங்களைப் பயன்படுத்தி, இளைஞர்கள் முதல் ஆரோக்கியமான முதியவர்கள் வரை, ஆரம்பகால அல்சைமர் நோயாளிகள், இதர நோயாளிகள் மற்றும் "சூப்பர் ஏஜர்கள்' என அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள சுமார் 3,56,000 செல்களை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். இதில் நரம்பியல் ஸ்டெம் செல்கள் மற்றும் முதிர்ச்சியடையாத நரம்பணுக்களை (நியூரான்கள்) அடையாளம் கண்டு ஸ்டெம் செல்லில்இருந்து முதிர்ந்த நரம்பணுக்களுக்குத் தெளிவான பாதையைக் கண்டறிந்தனர். வயது மட்டும் இந்த செயல்முறையை நிர்ணயிக்கவில்லை. ஆரோக்கியமான முதியவர்களிடம் நியூரான்கள் உருவாவதற்கான அறிகுறிகள் இன்னும் அதிகமாகவே இருந்தன. அதே சமயத்தில், நினைவாற்றல், சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பாதிக்கும் மூளை நோய்கள் புதிய நியூரான்கள் மூளையில் உற்பத்தியாவதை பெரிதும் தடுக்கின்றன என அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

விசையுறு பந்தைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலைக் கேட்டார் மகாகவி பாரதியார். மூளையின் சிந்தனையே அனைத்துக்கும் அடிப்படை. நம் மூளையில் என்ன உருவாகிறதோ அதுவே நம்மை உருவாக்குகிறது. இது மூளையின் நரம்பியல் நெகிழ்வுத்தன்மையை வயதான காலத்திலும், தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டு புதுப்பிக்கும் திறனைப் பிரதிபலிக்கும். குறிப்பாக, உடற்பயிற்சி, சீரான உணவு, போதுமான தூக்கம், மன அழுத்தத்தைக் குறைத்தல், வலுவான சமூக ஈடுபாடுகள் மற்றும் இதய அபாயங்களைக் கட்டுப்படுத்துதல் மூலம் இதை வலுப்படுத்த முடியும்.

இதற்கு, "நரம்பியல் உருவாக்கம்' (நியூரோஜெனிசிஸ்) காரணமாகவும் இருக்கலாம். போதுமான தூக்கம், நினைவாற்றல் ஒருங்கிணைப்பு மற்றும் நரம்பு முனைப்புக்கு மிகவும் முக்கியமானது. பல "சூப்பர் ஏஜர்கள்' மன ரீதியாக சுறுசுறுப்பாகவும் சமூக ஈடுபாட்டுடனும் இருப்பதற்கு இதுதான் காரணம்' என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் மஞ்சரி திரிபாதி.

"மனிதன் கடின உழைப்பால் இறப்பதில்லை. அவன் மனச் சிதறலாலும், கவலைகளாலும் தான் இறக்கிறான்' என்றார் அமெரிக்காவின் முன்னாள் தலைமை நீதிபதி சார்லஸ் எவன்ஸ் ஹியூஸ்.

மனம் உடலின் அடிமையாக இருக்கிறது. உடல் எதைச் சொல்கிறதோ, உடல் எதை விரும்புகிறதோ அதைத் தான் மனமும் திரும்பத் திரும்பச் செய்கிறது. துக்கத்திற்குரிய செயல்களைச் செய்து விட்டு மகிழ்ச்சி அடைய முடியாது. நம் மனம் எதைப் பற்றி சிந்திக்கிறதோ, அத்தகைய தன்மையையே உடல் பெறுகிறது. காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது; ஆயுளும் குறைந்து கொண்டே இருக்கிறது.

இக்கால சவாலான வாழ்க்கையில், மன அழுத்தம், கவலை, பொறாமை, முன்கோபம், ஏமாற்றம் எல்லாம் நாம் அன்றாடம் சந்திக்கும் அழையா விருந்தாளிகள். இதன் வெளிப்பாடுகள், உடலில் நோய்களாகப் பிரதிபலிக்கின்றன என்பது அறிவியல் கண்ட உண்மை. திடீர் மரணம் இன்றைய காலத்தில் இயல்பாகி விட்டது. "நோயற்ற மனிதன், போரற்ற உலகம்' என்பதே எப்போதும் உலக மக்களின் உளகிடக்கையாக உள்ளது.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments