முகப்பு
திருவள்ளூர்

"மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்படுமா?'

பட்டதாரி பெண்கள் திருமண உதவித் தொகை, கலப்புத் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள்

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:55 PM
பகிர்:

பட்டதாரி பெண்கள் திருமண உதவித் தொகை, கலப்புத் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் அலைச்சல் இன்றி பெறுவதற்கு வசதியாக மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, பொன்னேரியில் தனியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒன்றினை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாடுகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 620 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 30 மாவட்ட ஊராட்சிகள், 149 நகராட்சிகள் மற்றும் சென்னை உள்பட 10 மாநகராட்சிகள் அமைந்துள்ளன.
இதில் கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், ஆழ்த்துளைக் கிணறுகள் அமைத்தல், மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் சமூக நலத்துறையின் கீழ் விதவை மறுமணத் திட்டம், கலப்புத் திருமண திட்டம், பட்டதாரிப் பெண்களுக்கு திருமண உதவி உள்ளிட்ட அரசின் மக்கள் நலத்திட்டடங்கள் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதில் பெறவும், நிர்வாக வசதிகளுக்காகவும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து வட்டத் தலைமையிடமாக உள்ள பொன்னேரியில் ஒரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொன்னேரி வட்டத்தில் பொன்னேரி, ஆரணி, மீஞ்சூர் ஆகிய 3 பேரூராட்சிகள் அமைந்துள்ளன. அத்துடன், சோழவரம், மீஞ்சூர் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன. சோழவரம் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இதில் மீஞ்சூர் ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் சென்னை மாநகராட்சியின் எல்லையில் உள்ளது. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த இடையஞ்சாவடி ஊராட்சி கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் சேர்க்கப்பட்டது.
30 கி.மீ. தூரத்தில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்.....: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் தேவம்பட்டு, மாங்கோடு, கள்ளூர், பெரிய கரும்பூர், பனப்பாக்கம், கோளூர், பெரும்பேடு, தேவரஞ்சேரி, மெதூர், திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், பழவேற்காடு, தாங்கல்பெரும்புலம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மீஞ்சூரில் இருந்து 30 கி.மீ. முதல் 32 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன.
அதே நேரத்தில் மேற்கண்ட கிராமங்களில் இருந்து பொன்னேரி 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
அத்துடன் பொன்னேரியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, வணிக வரித்துறை, சார்பதிவாளர் அலுவலகம், அரசுக் கருவூலம், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலகம், உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளன.
அத்துடன் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்பட 5 நீதிமன்றங்கள், 5-க்கும் மேற்பட்ட தேசிய வங்கிகள் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், கிளை சிறைச்சாலை உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறேவேற்றுவதற்கான மத்திய, மாநில அரசு அளிக்கும் நிதிகள் அனைத்தும் ஊராட்சி மன்றம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
அதன் மூலம் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
காரணம், ஊராட்சி ஒன்றியங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவையாகும். எனவே, நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே, திருமண உதவி, இரண்டு பெண் பிள்ளைகள் திட்டம் உள்ளிட்ட அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக அமைக்கக் கோரும் பொன்னேரி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 28 ஊராட்சிகளையும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 27 ஊராட்சிகளையும் அமைக்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →