திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலத் துறை சார்பில் செயல்பட்டு வரும் "சகி' பெண்கள் வள மையத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தனியார், பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் சமூக நலத் துறை சார்பில் "சகி' பெண்கள் வளமையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் சமையல் உள்பட பல்வேறு பணிபுரிய உதவியாளர்கள் தேவை. பணிக்கு எழுத படிக்க தெரிந்தவர்களாக இருப்பது அவசியம். அதேபோல், பாதுகாவலர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு போதுமான கல்வித் தகுதியும் அனுபவமும் இருந்தால் போதுமானது. 24 மணிநேரம் ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும். உதவியாளர் பணிக்கு மாதந்தோறும் ரூ. 6,400, ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் பணிக்கு ரூ. 10 ஆயிரம் மாதந்தோறும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதிலும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பிப்போர் தங்களைப் பற்றிய முழு விவரங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் நகல் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்து செப்டம்பர் 8-ஆம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம், 2-ஆவது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், திருவள்ளூர்-602001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044 - 2766 3912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.