திருவள்ளூர்

நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் வாத்து வளர்ப்பு!

கிராமங்களில் வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் மூலம் நாள்தோறும் வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் வாத்து வளர்க்கும் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

எஸ். பாண்டியன்


கிராமங்களில் வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் மூலம் நாள்தோறும் வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் வாத்து வளர்க்கும் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு மற்றும் வாத்து வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. இங்கு வாத்துகள் மேய்வதற்கான நெல் வயல்களும் ஏரிகளும் அதிகமாக காணப்படுகின்றன. இதுவே, திருவள்ளூர், புல்லரம்பாக்கம், காந்திநகர், பூண்டி, பாக்கம், நத்தமேடு, சிவன்வாயல், தொட்டிக்கலை, தண்ணீர்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாத்து வளர்க்கும் தொழிலில் ஈடுபடுவதற்கு காரணமாக விளங்குகிறது. 
அதிலும் கிராமங்களில் வாத்துகளின் முட்டைகளும் இறைச்சியும் அதிகமாக தேவைப்படுகின்றன. இதனால் இன்றளவிலும் கிராமங்களில் வாத்துக்கு தேவை இருந்து வருகிறது. மேலும், வாத்துகள் குறைந்த நாள்களில் வளரும் தன்மையுடையவை. அவை வளர்ந்தவுடன் எளிதில் விற்பனை செய்து நாள்தோறும் தேவையான அளவுக்கு வருவாய் ஈட்ட முடியும். இதனால் விவசாயிகள் அதிக அளவில் வாத்து வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
தற்போது ஆட்டு இறைச்சி, நாட்டுக்கோழி மற்றும் மீன் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கிராமங்களில் இறைச்சிக்காக ஒரு வாத்தை ரூ.150-க்கு வாங்கிச் செல்கின்றனர். இதனால் பெரிய அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. அதேபோல், வாத்து முட்டைகளுக்கு அதிகமான சந்தை வாய்ப்பு இருக்கிறது. அவை ஆந்திரம் மற்றம் கேரளத்தில் அதிக அளவில் விற்பனையாகின்றன.
வாத்துகள் 4 மாதத்தில் மாதத்தில் இருந்து ஆறு  மாதத்துக்குள் பருவத்துக்கு வரும். ஒரு வாத்து குறைந்தது 20 முதல் 25 முட்டைகள் இடும். அதேபோல், குஞ்சு பொறிப்பதற்குத் தரமான முட்டைகள் தேவை என்றால் 10 பெண் வாத்துகளுக்கு  ஒரு ஆண் வாத்து என்ற கணக்கில் சேர்க்க வேண்டும். முட்டைகளையும், வாத்துகளையும் விற்க எங்கும் செல்லத் தேவையில்லை. கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் விவசாயிகளின் இடத்துக்கே நேரில் வந்து ஒரு முட்டை ரூ.10 என்ற விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
திருவள்ளூர் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் நெல் அறுவடை முடிந்த பிறகு வயல்வெளிகளில் வாத்து வளர்ப்பதற்காக பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஏரி மற்றும் சமவெளிப்பகுதியிலும் பட்டிகள் அமைத்து வாத்து வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.   நூற்றுக்கணக்கான வாத்துகள் வளர்த்தால்தான் முட்டைகள் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். வாத்துகள் மேய்வதற்கு நெல் வயல் நிறைந்த பகுதியாக இருப்பது அவசியம். இதுபோன்ற நிலங்களில்தான் வாத்துகளுக்குத் தேவையான தண்ணீர், நெல்மணி, புழு, பூச்சிகள் கிடைக்கும். பட்டி போட்டு வாத்து வளர்ப்பில் ஈடுபட்டால்தான் லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.   
இதுகுறித்து பாக்கம் ஏரிக்கரையோரம் வயலுக்கு அருகில் பட்டி அமைத்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ராஜேந்திரன் கூறியது:
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்திலிருந்து வாத்து மேய்ப்பதற்காக நெல் வயலுக்கு தொழிலாளிகள் வந்து செல்வர். அவர்கள்தான் என்னை வாத்து வளர்க்கும் தொழிலில் ஈடுபட வழிகாட்டினர். அதன்படி முதல் முறையாக ரூ.70 வீதம் மூன்று மாதம் வளர்ந்த 200 வாத்துக் குஞ்சுகளை வாங்கி வளர்த்தேன். நெல் வயல்களில் மேயவிட்டால் புழு, பூச்சிகளை மேய்ந்து கொண்டே இருக்கும்.  இதேபோல், காலை முதல் மாலை வரை மேய்ந்துவிட்டு திரும்ப பட்டிக்கு வந்து சேரும். ஆனால், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான வாத்துகளை வளர்த்தால் தீவனச் செலவு ஏற்படும். எனினும், அதற்கு ஏற்ப வருவாய் கிடைக்கிறது. 
நன்றாக வளர்ந்த நிலையில் வாத்துகள் 5 மாதத்திலேயே முட்டையிடத் தொடங்கின. அவற்றை கிராமங்களில் இருந்து பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அதேபோல், வளர்ந்த நிலையில் உள்ள வாத்துகளை வியாபாரிகள் மொத்தமாக இறைச்சிக்காக வாங்கிச் சென்றனர். இதனால் உடனே பணம் கிடைத்து விடுவதால், தொடர்ந்து அதிக அளவில் வாத்துகளை வளர்த்து வருகிறேன் என்றார் அவர்.

திருவள்ளூர் அருகே உள்ள பாக்கம் பகுதியில் வயல்வெளியில் மேயும் வாத்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT