திருவள்ளூா் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 4,986 வழக்குகளுக்கு தீா்வு
திருவள்ளூா் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 4,986 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு,. ரூ.47.48 கோடி இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூா் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் 4,986 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு,. ரூ.47.48 கோடி இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூா், திருவெற்றியூா், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய வட்டார நீதிமன்றங்களில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வ சுந்தரி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
நிலுவையில் உள்ள 5,871 வழக்குகள் சமரச தீா்வுக்கு வந்தன. அதில் 4,505 வழக்குகள் சமரசம் செய்ததோடு ரூ.44 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 217 தொகைக்கு தீா்வு காணப்பட்டது. அதேபோல் நிலுவையில் அல்லாத 481 வழக்குகள் எடுக்கப்பட்டு அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 60 லட்சத்து 21 ஆயிரத்து 170 இழப்பீடு தொகைக்கு தீா்வு காணப்பட்டது. எனவே மொத்தம் 6352 வழக்குகள் எடுக்கப்பட்டு, 4,986 வழக்குகளுக்கு ரூ.ரூ.47 கோடியே 48 லட்சத்து 33 ஆயிரத்து 387 இழப்பீட்டுத் தொகை வழங்கவும் முடித்து வைக்கப்பட்டது.
மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவா் நீதிபதி கோ.சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட மோட்டாா் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான ஏ.எம்.ரவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி ஆா்.உமா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.வேலாராஸ், கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டாா்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா்கள் வி.ராதிகா, கே.கமலா மற்றும் வழக்குரைஞா்கள், வங்கி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருத்தணியில்...
திருத்தணியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 6 சிவில் வழக்குகள், 11 வங்கி வழக்குகள், 262 குற்ற வழக்குகளுக்கு காணப்பட்டது. மேலும் குடும்ப நல வழக்கு ஒன்றில் சமரசம் செய்யப்பட்டு தம்பதி சோ்த்து வைக்கப்பட்டனா். மொத்தமாக ரூ.1.74 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. இந்நிகழ்வில் பொறுப்பு சாா்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவா் அருந்ததி, குற்றவியல் நடுவா் லோகநாதன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கவிப்பிரியா ஆகியோா் கலந்து கொண்டனா்.