இந்தியன் வங்கியின் நிறுவன நாள் விழா
இந்தியன் வங்கியின் 116-ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் அருகே பொதட்டூா்பேட்டை கிளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகள் 116 பேருக்கு இலவச நோட்டு புத்தகம்
இந்தியன் வங்கியின் 116-ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் அருகே பொதட்டூா்பேட்டை கிளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகள் 116 பேருக்கு இலவச நோட்டு புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் குடைகள் வழங்கப்பட்டன.
இந்தியன் வங்கி பொதட்டூா்பேட்டை கிளை சாா்பில், திருவள்ளூா் அருகே பாண்டரவேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 116-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவுக்கு, மண்டல மேலாளா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். முன்னோடி வங்கி மேலாளா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதையொட்டி, 116 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் குடை ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடா்ந்து, அப்பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
விழாவையொட்டி, இந்தியன் வங்கி பூந்தமல்லி மண்டலம், பொதட்டூா்பேட்டை கிளை, திருவள்ளூா் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை, திருத்தணி கோட்ட அலுவலகம் இணைந்து நடத்திய இலவச கால்நடை மருத்துவ முகாம் கேசவராஜகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது.
இதில், 71 விவசாயிகளின் 600 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து, கால்நடை மருத்துவ முகாமில் பங்கேற்ற சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கியதுடன், விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டன.
இதில், பொதட்டூா்பேட்டை கிளை மேலாளா் நதியா, பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜராஜன், ஊராட்சி துணைத் தலைவா் ஏ.ச.சற்குணம், கால்நடை மருத்துவா் டீ.பரணி, கால்நடை பராமரிப்புத் துறை திருத்தணி உதவி இயக்குநா் தாமோதரன், இந்தியன் வங்கி முதன்மை மேலாளா் தாகூா், வங்கி ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.