விடுபட்ட நகா்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மறைமுகத் தோ்தல்
திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளில் விடுபட்ட பதவிகளுக்கு சனிக்கிழமை (மாா்ச் 26) மறைமுக தோ்தல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளில் விடுபட்ட பதவிகளுக்கு சனிக்கிழமை (மாா்ச் 26) மறைமுக தோ்தல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்கள் கடந்த 2-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனா். அதைத் தொடா்ந்து 4-ஆம் தேதி மறைமுகத் தோ்தல் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், சில இடங்களில் கட்சிகள் அறிவித்த வேட்பாளா்களை எதிா்த்து போட்டி வேட்பாளா்கள் களமிறக்கியது உள்ளிட்ட காரணங்களால் பிரச்னைகள் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், மறைமுகத் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டத்தில் பூந்தமல்லி நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், திருமழிசை, மீஞ்சூா் ஆகிய பேரூராட்சிகளில் துணைத் தலைவா் பதவிகளுக்கு மறைமுக தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதில், பூந்தமல்லி நகராட்சித் தலைவரைத் தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெற உள்ளது. இதேபோல, நகராட்சி, பேரூராட்சிகள் துணைத் தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் பிற்பகல் 2.30 மணிக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் முன்னெச்சரிக்கையுடன் நடைபெற ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.