வாக்குரிமையைப் பறிக்கும் மோடியும் பாஜகவும்: மமதா பானர்ஜி
மக்களின் வாக்குரிமையை பிரதமர் மோடியும் பாஜக அரசும் பறிக்க முயல்வதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் மக்களின் வாக்குரிமையை பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய பாஜக அரசும் பறிக்க முயல்வதாக மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ரமலான் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மமதா பானர்ஜி, கூட்டத்தில் பேசுகையில், "வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆர்) பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
எஸ்ஐஆர் குறித்து நீதிகோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தையும், பின்னர் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தையும் அணுகினோம். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்.
பிரதமர் மோடியும் பாஜகவும் உங்கள் வாக்குரிமையைப் பறிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயகத்தையும் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க இறுதிவரையில் போராடுவோம்.
நாங்கள் அனைத்து குடிமக்களுடனும், ஒவ்வொரு சமூகத்துடனும், ஒவ்வொரு மாநிலத்துடனும் துணை நிற்கிறோம்.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களே. நாங்கள் தொடர்ந்து உங்களுக்காக நின்று பணியாற்றுவோம்.
முன்னேற்றம் மற்றும் வெளிச்சத்தின் பாதையில் ஏதேனும் தடைகள் இருந்தால், அதனை அகற்றுவோம். அவர்கள் நமது அரசைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
பயப்படுபவர்கள்தான் தோற்பர்; அழிவர். அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தாலும், நாங்கள் அதைத்தான் சொல்வோம்" என்று தெரிவித்தார்.