அதிரடி காட்டும் மமதா.. திரிணமூல் காங்கிரஸில் 74 எம்.எல்.ஏ-க்களுக்கு ‘சீட்’ இல்லை!
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 74 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 74 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அறிவிக்கப்பட்டன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிகத் தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மமதா பானர்ஜி, தனித்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டு, மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில், மீதமுள்ள மூன்று தொகுதிகள் கூட்டணிக் கட்சியான அனித் தாபாவின் பாரதிய கூர்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி மீண்டும் போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸின் தற்போதைய எம்.எல்.ஏக்களாக இருக்கும் 74 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் வழங்க மமதா பானர்ஜி மறுத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 215 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ள நிலையில், அதில் தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் 74 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதில், முக்கியத் தலைவர்களான பரேஷ் பால் (பெலேகட்டா), விவேக் குப்தா (ஜோராசங்கோ), முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி (ஷிப்பூர்), நடிகர்கள் சிரஞ்சித் (பராசத்), கஞ்சன் முல்லிக் (உத்தர்பரா), அமைச்சர்கள் தாஜ்முல் ஹொசைன் (ஹரிச்சந்திரபூர்) மற்றும் ஜோத்ஸ்னா மண்டி (ராணிபந்த்) ஆகியோரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டோபாத்யாய், பட்டியலில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரத்னா சட்டர்ஜி, பெஹாலா மேற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பழைய விசுவாசிகளின் வாரிசுகளான கல்யாண் பந்தோபாத்யாயின் மகன் சிர்சான்யா மற்றும் சாதன் பாண்டேயின் மகள் ஸ்ரேயா ஆகியோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இடது முன்னணியின் அமைச்சர் ஷித்தி கோஸ்வாமியின் மகள் வசுந்தராவும் இடம்பெற்றுள்ளார்.
திரிணமூல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் (பெலேகட்டா) போட்டியிடுகிறார். இந்திய தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மன், பெங்கால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிப்சங்கர் பால் ஆகியோர் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய வேட்பாளர் பட்டியலில் 60 வயதுக்குள்பட்டோர் 177 பேரும், அவர்களில் 40 வயதுக்குள்பட்ட 42 பேரும் உள்ளனர். மேலும், 52 பெண் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.