எஸ்ஐஆர்! உயிரோடு உள்ளவர்கள் இறந்தவர்களாகக் குறிப்பு - மமதா குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் உயிரோடுள்ள வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு...
மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் உயிரோடுள்ள வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முதல்வர் மமதா, எஸ்ஐஆர் பணிகள் மூலம் மேற்கு வங்கத்தில் உயிரோடுள்ள ஏராளமான வாக்காளர்கள் இறந்தவர்களாகக் குறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“நம்மோடு சில வாக்காளர்கள் இங்கு உள்ளனர். எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மூலம் உயிரோடுள்ள வாக்காளர்களை இறந்தவர்களாகக் குறித்ததற்கு, தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும். இன்று அவர்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க இங்கு வந்துள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு வரும் மார்ச் 8 அன்று கொல்கத்தாவிற்குச் செல்லவுள்ள நிலையில், முதல்வர் மமதா தலைமையில் காலவரையற்ற மாபெரும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
In West Bengal, Chief Minister Mamata Banerjee has alleged that living voters are being marked as dead through SIR.