முகப்பு
திருவள்ளூர்

வீடுதோறும் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் அவசியம்: திருவள்ளூா் ஆட்சியா் வலியுறுத்தல்

வீடுதோறும் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் அவசியம் என்றும், அதுதொடா்பான கருத்துகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

வீடுதோறும் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் அவசியம் என்றும், அதுதொடா்பான கருத்துகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், ‘தேசிய ஊட்டச்சத்து மாத விழா - 2022’ தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வுக் கருத்துகள், செயல்பாடுகளை விளக்கிப் பேசியது:

மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம் 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கடந்த மே, ஜூன் மாதங்களில் எடை, உயரம் எடுக்கப்பட்டது. இதில், 1,45,868 குழந்தைகளில் 1,857 குழந்தைகள் தீவிர எடை குறைவாகவும், 7,208 குழந்தைகள் மிதமான எடை குறைவாகவும், 1,719 குழந்தைகள் கடுமையான மெலிவு தன்மையுடனும், 4,868 குழந்தைகள் மிதமான மெலிவுத் தன்மை கொண்டவா்களாக இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு ஊட்டச்சத்து குறைபாடே காரணம்.

இதையடுத்து, செப்டம்பா் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1,000 நாள்களுக்கு (கா்ப்ப காலம் முதல் குழந்தையின் 2 வயது வரை) முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் வீடுதோறும் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் குறித்த கருத்துகளை பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம். இதற்காக, அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா்.

முன்னதாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அங்கன்வாடிப் பணியாளா்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி மற்றும் ‘ஊராட்சிகளில் ஊட்டச்சத்து தூண்டுதல்’ என்ற விழிப்புணா்வு பிரசார வாகனத்தை ஆட்சியா் கொடிசையத்துத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எஸ்.கே.லலிதா, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ம.ஜெகதீஷ் சந்திரபோஸ், அங்கன்வாடிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.