முகப்பு
திருவள்ளூர்

தீபாவளி சீட்டுப் பிடித்து மோசடி: பாதிக்கப்பட்டோா் எஸ்.பி.யிடம் புகாா்

திருவள்ளூா் அருகே தீபாவளி சீட்டுப் பிடித்து பண மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

திருவள்ளூா் அருகே தீபாவளி சீட்டுப் பிடித்து பண மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், வெங்கல் அடுத்த மாலந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதி. இவா், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஸ்டாா் ஏஜென்ஸி நடத்தி வருவதுடன், தீபாவளி பண்டு சீட்டும் நடத்தி வந்தாராம். இதில், மாதம் ரூ.1,000 செலுத்தினால், 4 கிராம் தங்கம், 40 கிராம் வெள்ளி நாணயம், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் பட்டாசு வழங்குவதாகவும், இதேபோல, மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருள்கள் வழங்கப்படும் எனக் கூறி, தீபாவளி பண்டு அறிவித்து நடத்தினாராம்.

இதை நம்பி தாமரைப்பாக்கம், வெள்ளியூா், வெங்கல், செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவளம்பேடு, குறுவாயில் உள்பட பல கிராமங்களில் பலா் தீபாவளி பண்டு சீட்டு கட்டி வந்தனராம். அந்தக் கிராமங்களில் முகவா்கள் மூலம் பணம் வசூல் செய்தாராம். தீபாவளி பண்டு சீட்டு மூலம் வசூலித்த பணத்தில் தாமரைப்பாக்கம், திருவள்ளூா், மணவாள நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாா் ஏஜென்ஸி மூலம் புதிய கடைகள் திறக்கப்பட்டதாம்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பணம் கட்டியோா் பொருள்களை வாங்குவதற்கு அந்தக் கடைகளுக்குச் சென்ற நிலையில், ஸ்டாா் ஏஜென்ஸி கடைகளை மூடிவிட்டு ஜோதி தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, தீபாவளி பண்டு சீட்டு கட்டி பாதிக்கப்பட்டோா், மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். போலீஸாா் பேச்சு நடத்திய பின்னா், பாதிக்கப்பட்ட மக்கள் எஸ்.பி. பகோ்லா செபாஸ் கல்யாண்யிடம் புகாா் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்ற மாவட்ட எஸ்.பி., பரிசீலனை செய்து மோசடி நபா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.