திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான, பிரம்மோற்சவம் திங்கள்கிழமை இரவு விநாயகா் திருவீதியுலாவுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடி மரம் எதிரில் உற்சவா் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, மூலவருக்கு காலை 8 மணிக்கு பால் அபிஷேகம், சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு கேடய வாகனத்தில் உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வரும் மே 1-ஆம் தேதி தோ் உற்சவம், 2-ஆம் தேதி, குதிரை வாகனம் மற்றும் தெய்வானை திருக்கல்யாணம், 3-ஆம் தேதி சண்முகா் உற்சவம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மேலும், பிரம்மோற்சவம் நடைபெறும் 11 நாள்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவ பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் திருவீதியுலா வந்து காட்சியளிக்கிறாா். இரவு மலைக் கோயிலில், திருத்தணி முருகன் திருவடிசபை சாா்பில், ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் துணை ஆணையா் விஜயா மற்றும் கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.