திருவேற்காட்டில் வழக்குரைஞர் வீட்டில் இருந்து ரூ. 26 லட்சம் பணத்தை திருடிய இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, ரூ. 25 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
திருவேற்காடு, விஜிஎன் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (60). சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். மேலும், வீட்டு மனை விற்பனை தொழிலும் செய்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் அருகே கிளாம்பாக்கம், நேரு நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் (41) என்பவர், செவ்வாய்பேட்டை தொழுவூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (45) என்பவரை வெற்றிசெல்வனுக்கு ஓட்டுநர் வேலைக்கு பணியமர்த்தினார். இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி வெற்றிசெல்வன், ஓட்டுநர் கஜேந்திரனுடன் காஞ்சிபுரத்துக்கு பணி தொடர்பாக காரில் சென்று விட்டு, நள்ளிரவு வீடு திரும்பினார். பின்னர் வெற்றிச்செல்வன் வீட்டில் ஓட்டுநர் கஜேந்திரனும் தங்கியுள்ளார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பூஜை அறையில் வைத்திருந்த ரூ. 26 லட்சம் ரொக்கத்துடன் இருந்த லாக்கர் பெட்டி காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து வெற்றிச்செல்வன் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் ஆய்வாளர் உமாமகேஸ்வரி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து கஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாகி இருந்த கஜேந்திரனை திங்கள்கிழமை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் வெற்றிச்செல்வன் வீட்டிலிருந்து ரூ. 26 லட்சத்தை பணத்தை திருடிச் சென்றதாகவும், பின்னர் அதிலிருந்து ரூ. 5 லட்சம் பணத்தை ஸ்ரீதருக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் ஸ்ரீதரையும் பிடித்து, இருவரிடமிருந்து ரூ. 25 லட்சம் ரொக்கம், காரை பறிமுதல் செய்தனர்.
வழக்கு தொடர்பாக இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.