திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை!
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி சுவற்றின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசநோயாளி புதன்கிழமை திடீரென சுவர் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அருகே அரண்வாயல் குப்பம், புத்தர் நகரை சேர்ந்தவர் செல்லப்பனின் மகன் முனுசாமி (50). இவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி காலை மதுபோதையில் ரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மனநலம் பாதித்ததது போல மருத்துவமனையில் ரகளை செய்து 4-ஆவது வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் முனுசாமியை பிடித்து மீண்டும் படுக்கையில் கட்டி வைத்து சிகிச்சை பெற்று அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க செல்வதாக சொல்லி கட்டை அவிழ்த்து விட்டதும், மீண்டும் மனநலம் பாதித்தது போல் கத்திக் கொண்டே மாடிப்படிகள் ஏரியும் ரகளை செய்துள்ளார்.
அப்போது திடீரென முதல் வளாக படிக்கட்டில் இருந்து கீழே இறங்கி, நான்கு சக்கர வாகன நிறுத்தத்தின் சுற்றுச்சுவர் மீது ஏறி தலைகுப்புற கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து முனுசாமியின் மனைவி சுமதி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.