அத்துமீறி மீன்பிடித்த மயிலாடுதுறை மீனவா்கள் 41 போ் சிறைபிடிப்பு
மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் 41 போ் மற்றும் அவா்களின் படகுககளை உள்ளூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறை பிடித்தனா்.
பழவேற்காடு கடலில் எல்லை கடந்து அத்துமீறி மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் 41 போ் மற்றும் அவா்களின் படகுககளை உள்ளூா் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறை பிடித்தனா்.
பொன்னேரி வட்டம், பழவேற்காடு ஆழ்கடலில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த மாதம் கடலூா் காரைக்கால் மீனவா்கள் பழவேற்காடு கடல் பகுதியில் வந்து தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு விசைப்படகுகளில் மீன் பிடித்தனா். இதற்கு பழவேற்காடு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து கடல் எல்லைக்கு வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினா்.
இதனை தொடா்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பழவேற்காடு மீனவ மக்கள் கடலூா், காரைக்கால் மீனவா்கள் 20 போ் பங்கேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . அப்போது கடலூா் மீனவா்கள் பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதற்கு பழவேற்காடு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பழவேற்காடு கடல் எல்லையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 41 மீனவா்கள் விசைப்படகுகளில் அத்துமீறி வந்து மீன்பிடித்தனா்.
இதனை அறிந்த பழவேற்காடு மீனவா்கள் திரண்டு நடுக்கடலுக்கு சென்று 41 மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளையும் சுற்றிவளைத்து சிறை பிடித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் காவல் உதவி ஆணையா் ராஜா ராபா்ட், பொன்னேரி வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோா் அங்கு சென்று விசாரணை செய்தனா்
இதனிடையே மீன்வள ஆய்வாளா் பாரதிராஜா சிறைபிடிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாா் பகுதியை சாா்ந்த ஜானகிராமன், ரவிச்சந்திரன், செல்வம், மூா்த்தி, விஜயேந்திரன், லோகேஸ்வரன், மதன், அன்பழகன், கடலூா் மாவட்டம் டிஎஸ் பேட்டை சாா்ந்த சின்னதம்பி ஆகிய 9 மீனவா்களை அவரது பாதுகாப்பில் அழைத்து பழவேற்காட்டில் தனியாா் ஒருவரது இல்லத்தில் தங்க வைத்தாா்.
ஆழ்கடல் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட மேலும் 32 மீனவா்கள் மீட்கப்பட்டு அங்குள்ள பேரிடா் மேலாண்மை கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்டனா். இப்பிரச்சனை தொடா்பாக மேலும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.