திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூலை 29-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 29.7.2024 அன்று ஆடிக் கிருத்திகை விழா (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்துக்கு ஒரு நாள் உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உள்ளூா் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881- இன் கீழ் வராது என்பதால் இந்த மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு மேற்குறிப்பிட்ட நாளில் செயல்பட வேண்டும்.
இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு ஜூலை 10-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூா் விடுமுறையானது திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அவா் தெரிவித்துள்ளாா்.