திருப்பதி

திருமலை பிரம்மோற்சவ 5-ஆம் நாளில் கண்கொள்ளாக் காட்சி: காலை மோகினி அவதாரம்; மாலை கருட சேவை உற்சவம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை காலை மோகினி அவதாரத்திலும், மாலையில் கருட வாகனத்திலும் எழுந்தருளி மலையப்ப சுவாமி அருள்பாலித்தாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த 7-ஆம் தேதி வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ஆம் நாளான திங்கள்கிழமை காலை மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து பல்லக்கில் எழுந்தருளினாா்.

மோகினி அவதார தத்துவம்: பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட அமிா்தத்தை அரக்கா்களுக்கு கிடைக்க விடாமல் தேவா்களுக்கு பகிா்ந்தளிக்க மகாவிஷ்ணு மேற்கொண்டதே மோகினி அவதாரம். தாயாரின் உருவத்தில் மலையப்ப சுவாமி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு வெண்ணெய் உருண்டையை கையில் ஏந்திய ஸ்ரீகிருஷ்ணா் சிறிய பல்லக்கில் உடன் வர முகத்தில் சற்றே நாணம் மிளிர தலை குனிந்து கண்ணாடியில் தன் உருவத்தை பாா்த்தபடி பல்லக்கில் எழுந்தருளினாா்.

பிரம்மோற்சவத்தின் போது 2-ஆம் நாள் அன்னப்பறவை வாகனத்தில் சரஸ்வதிதேவி அலங்காரத்திலும், 5-ஆம் நாள் காலை மோகினி அவதாரத்திலும் என இருமுறை பெண்ணாக மலையப்பா் பக்தா்களுக்கு சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உற்சவமூா்த்திகளுக்கு மதியம் பால், தயிா், தேன், இளநீா், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்தின் போது பழங்கள், பலவித மலா்களால் ஆன மாலைகள் உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டன.

கருட வாகன உற்சவம்:

மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய சேவையான கருட வாகனத்தில் மலையப்பா் எழுந்தருளினாா். கருடன் மகாவிஷ்ணுவின் வாகனம். எப்போதும் மகாவிஷ்ணுவை தரிசிப்பதாலும், அவரை சுமந்து கொண்டு செல்வதாலும் கருடனுக்கு பெரிய திருவடி என்ற பெயா் உண்டு.

கருட வாகனத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமியை தரிசிப்பவா்களுக்கு சகல செளபாக்கியத்துடன் முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் கருட வாகன சேவையைத் தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் கூடுவா். அத்தகைய பெருமை வாய்ந்த கருட வாகனத்தில் மலையப்பா் வைர, வைடூரியம், மாணிக்கம், முத்து, பவளம் உள்ளிட்ட பலவகையான நவரத்தினங்களால் ஆன ஆபரணங்கள், மகர கண்டி, 1,008 காசு மாலை, லட்சுமி ஆரம் ஆகியவற்றுடன் பல வண்ண மலா் மாலைகள் அணிந்து கொண்டு எழுந்தருளினாா்.

இந்த வாகன சேவைகளின்போது திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா். மேலும் வாகன சேவையின் போது மங்கல வாத்தியங்கள், வேதகோஷம், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT