திருமலையில் முன்னாள் ராணுவ வீரா் கொலை: குடியாத்தத்தைச் சோ்ந்தவா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் திருமலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் திருமலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவரை திருமலை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருமலையில், ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் எதிரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான வரிசை அருகில் அடையாளம் தெரியாத ஒருவா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்கு பக்தா்கள் வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து திருமலை முதலாவது காவல் நிலைய ஆய்வாளா் ஜெகன்மோகன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினாா். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் பதிவைக் கொண்டு கொலையாளி குறித்து ஆய்வு செய்தாா்.
விசாரணையில் கொலையுண்டவா் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் கந்தசாமி என்பது தெரிய வந்தது.
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் 2 மணி நேரத்தில் கொலையாளியை போலீஸாா் அடையாளம் கண்டு கைது செய்தனா். கைதானவா் வேலூா் மாவட்டம் குடியாத்தத்தைச் சோ்ந்த பாஸ்கா் என்பது விசாரணையில் வெளியானது. பாஸ்கரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.