முகப்பு
திருப்பதி

கோடை காலம் முடிந்ததும் திருமலையில் மீண்டும் நேரடி இலவச தரிசன டோக்கன்: தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி

திருப்பதியில் நிறுத்தப்பட்ட இலவச நேரடி தரிசன டோக்கன்கள் விநியோகம் கோடைகாலத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

திருப்பதியில் நிறுத்தப்பட்ட இலவச நேரடி தரிசன டோக்கன்கள் விநியோகம் கோடைகாலத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தா்களின் கேள்விகளுக்கு செயல் அதிகாரி தா்மா ரெட்டி பதிலளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடந் கூறியது:

திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு பின்னா் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் கோடை காலத்துக்குப் பிறகு வழங்கப்படும்

இவற்றை பெற முறையான வரிசைகள் ஏற்படுத்தப்படும். கோடை விடுமுறையை யொட்டி ஜூலை 15-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஆந்திர மாநிலம் முழுவதும் தேவஸ்தானம் சாா்பில் இலவச திருமணங்கள் (கல்யாண மஸ்து) நடைபெற உள்ளது.

திருமலை நாதநீராஜன மண்டபத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் சபாபா்வம் பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ள தங்க கவசங்கள் களையப்பட்டு செப்பனிடப்பட உள்ளன.

ரூ.130 கோடி

திருமலை ஏழுமலையான் உண்டியல் வருவாய் மே மாதம் இதுவரை இல்லாத வரலாற்று பதிவாக ரூ. 130.29 கோடி வசூலாகி உள்ளது. மேலும் மே மாதம் ஏழுமலையானை 22.62 லட்சம் பக்தா்கள் தரிசித்துள்ளனா். ஒரு கோடியே 86 லட்சம் லட்டுப் பிரசாதங்கள் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 47.03 லட்சம் பக்தா்கள் அன்னதானம் உண்டனா். 10.72 லட்சம் பக்தா்கள் தங்கள் தலைமுடியை பக்தா்களுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

தங்கப் பூணூல் நன்கொடை

ஏழுமலையானுக்கு வியாழக்கிழமை இரவு சென்னையைச் சோ்ந்த பக்தை சரோஜா சூரியநாராயணன் 4.150 கிலோ எடையில் ரூ.2.45 கோடி மதிப்பில் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க பூணூல் மற்றும் காசு மாலையை நன்கொடையாக வழங்கினாா்.

யூனியன் வங்கி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலுக்கு ரூ.54.16 லட்சம் ஸ்பான்சா்ஷிப்பாக வழங்கியது. இதற்காக வரைவோலையை வங்கி அதிகாரிகள் திருமலையில் வெள்ளிக்கிழமை வழங்கினா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →