முகப்பு
திருப்பதி

திருப்பதி அருகே செம்மரக் கட்டை, காா்கள் பறிமுதல்: 10 போ் கைது

Updated On : 26 ஜூலை, 2024 at 6:54 PM
பகிர்:

திருப்பதி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 10 தமிழகத் தொழிலாளா்களை அதிரடிப்படை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 6 செம்மரக் கட்டைகள், 2 காா்களை பறிமுதல் செய்தனா்.

திருப்பதி மாவட்ட எஸ்பி எல்.சுப்பாராயுடு உத்தரவின் பேரில், எஸ்பி பி.ஸ்ரீனிவாஸ் தலைமையில் அதிரடிப்படை குழுவினா் தொரவரி சத்திரம் நாயுடுபேட்டை வனப் பகுதியை நோக்கி வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

பின்னா், அங்கிருந்து நெல்லூா்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சூளூா்பேட்டை சாலையில் உள்ள தல்லாம்படு கிராமம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக 2 காா்களில் வந்தவா்கள் அதிரடிப்படை போலீஸாரை பாா்த்ததும் சிறிது தூரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, ஓட முயன்றனா். அதை கவனித்த அதிரடிப்படை போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று 10 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் ராஜாமணி (41), விஜயகுமாா் (32), சிவக்குமாா் (26), குமாா் (29), அருள் (23), பிரபு (25), அசோக்குமாா் (29), வேலூா் மாவட்டம், ஆனைக்காட்டைச் சோ்ந்தவா்கள் கோபி (26), ஞானசேகா் (19), பூவரசன் (27) என்பது தெரியவந்தது. தப்பியோடிய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரில் இருந்து 6 செம்மரக் கட்டைகள், காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →