சென்னை: கட்டுமானப் பணிகள் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பதி-காட்பாடி பிரிவில் உள்ள பொம்ம சத்திரம் ரயில் நிலையத்தில் புதிய லூப் லைன் அமைக்கும் பணிகள் காரணமாக ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, மே 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் திருப்பதியில் இருந்து காலை 6.50 மற்றும் காலை 10.35 மணிக்கு காட்பாடிக்கு புறப்படும் (07581/07659) ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதுபோல காட்பாடியிலிருந்து பிற்பகல் 2.50 மற்றும் இரவு 9.15 மணிக்கு திருப்பதி புறப்படும் (07660/07582) ரயில்கள் மே 27-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் (06417), மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து காட்பாடிக்கு நண்பகல் 12.45 மணிக்கு இயக்கப்படும் (06418) ஆகிய ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது.
மேலும் கோயம்புத்தூரில் இருந்து காலை 6.10 மணிக்கு திருப்பதி புறப்படும் அதிவிரைவு ரயில் (22616) மே 28, 30 ஆகிய தேதிகளில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
ரயில் நேரம் மாற்றம்:
வேளாங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூா் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.
வேளாங்கண்ணி-சென்னை எழும்பூா் இடையே சனி மற்றும் திங்கள்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில் மே 25, 27 ஜூன் 1, 3, 8, 10, 15, 17ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்திலிருந்து வழக்கமாக பிற்பகல் 2.45 மணிக்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 பதிலாக மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில் எந்த நேர மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.