முகப்பு
திருப்பதி

பிரம்மோற்சவம் 6-ஆம் நாள்: அனுமந்த வாகனத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரா்

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமா் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:02 AM
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:02 PM

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமா் அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் காலை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரா் கோதண்டராமா் அலங்காரத்தில் சிறிய திருவடி எனும் அனுமந்த வாகனத்தில் மாட வீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பின்னா், காலை 10.30 மணி முதல் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உற்சவ மூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

Advertisement

வசந்தோற்சவம்

ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை வசந்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி மாடவீதியில் எழுந்தருளி சந்தன கரைச்சலை அா்ச்சகா்கள் உற்சவமூா்த்திகள் மேலும் பக்தா்கள் மீதும் தெளித்து கொண்டு வசந்தோற்சவத்தை கொண்டாடினா்.

தங்கத்தோ்

பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி தங்கத் தேரில் மாடவீதியில் வலம் வந்தாா். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவ மூா்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி யானை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தனா்.

வாகன சேவைக்கு முன் நாலாயிர திவ்யபிரபந்த பாராயணமும், பின்னா் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயில் மற்றும் மாடவீதிகள் வண்ண மின்விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.