தேர்வெழுத அனுமதிக்காததால் மாணவர் தற்கொலை: செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்தக் கல்லூரியில் பயிலும் சக மாணவர்கள் புதன்கிழமை மேற்கொண்ட உள்ளிருப்புப் போராட்டம் வன்முறையாக மாறியது.
செய்யாறை அடுத்த முக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவரது மகன் தணிகைமலை. இவர் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வரலாறு இரண்டாமாண்டு படித்து வந்தார்.
தணிகைமலை குடும்ப சூழ்நிலை காரணமாக கூலி வேலைக்குச் சென்று கல்லூரியில் படித்து வந்தாராம். இதன் காரணமாக அவர் கல்லூரிக்கு சரிவர வரமுடிவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, அவருக்கு 41 சதவீத வருகைப் பதிவு மட்டுமே இருந்ததால், தணிகைமலையிடம் தேர்வுக் கட்டணத்தை வாங்க மறுத்ததுடன், அவரை பல்கலைக்கழக தேர்வு எழுதவும் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் அனுமதிக்கவில்லையாம்.
இதனால், மனமுடைந்த தணிகைமலை செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷ விதைகளை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இரவில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தணிகைமலை தற்கொலை சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்களை வீசிய மாணவர்கள்: தகவலறிந்து அங்கு வந்த கல்லூரி முதல்வர் மூர்த்தியை மாணவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மாணவர்கள் சிலர் வரலாற்றுத் துறை அலுவலகத்தை நோக்கி கல்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அங்கிருந்த தகவல் பலகையின் கண்ணாடியும், குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் சேதமடைந்தன. இதனால் அச்சமடைந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் அலுவலகக் கதவை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்தனர்.
அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீஸார் மாணவர்களை சமாதானம் செய்தனர்.
"துறை ரீதியாக நடவடிக்கை': தொடர்ந்து, கல்லூரி முதல்வர் மூர்த்தியிடம் மாணவர் தணிகைமலையின் தந்தை சரவணன், உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருகைப் பதிவு குறைவாக உள்ள மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மூர்த்தி, புகார் மனுவின் அடிப்படையில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வருகை சதவீதம் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மருத்துவ உடல் தகுதிச் சான்று அடிப்படையில் பல்கலைக்கழக தேர்வுக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதன்பேரில், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.