முகப்பு
செய்திகள்

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

கர திரைப்பட விமர்சனம்....

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:43 PM
தனுஷ் - dinamani
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கரசாமியான நடிகர் தனுஷ் இனி திருடப்போவதில்லை என முதல் காட்சியிலேயே இறுதியாக ஓர் திருட்டை மேற்கொள்கிறார். ஆனால், அச்சம்பவத்தில் சிக்கி கடுமையாக அடி வாங்குபவரைக் காவல்துறையினர் அள்ளிச்சென்று பல வழக்குகளை அவர் மீது திணிக்க நினைக்கின்றனர். அதைக் கவனிக்கும் தனுஷ், காவல்துறை அதிகாரி சுராஜ் வெஞ்சரமூடுவைத் தாக்கி அங்கிருந்து தப்புகிறார். திருட்டைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் சொந்தத் தொழில் செய்யலாம் எனத் தோன்ற ராமநாதபுரத்திலிருக்கும் தன் தந்தை கேஎஸ் ரவிக்குமாரைத் தேடி வருகிறார். அப்பாவிடமிருக்கும் 8 ஏக்கர் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து அதில் கிடைக்கும் கடனில் தொழில் செய்யலாம் என முயற்சிக்கிறார். ஆனால், அப்பா ஏற்கனவே அந்த நிலத்தை அடமானம் வைத்து டிராக்டர் வாங்கியதும் அதனால் ஏற்பட்ட சில குழப்பங்களுக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

இதனால் மகனால் மனவருத்தம் ஏற்பட அடுத்த நாள் அப்பாவான கேஎஸ் ரவிக்குமார் இறந்தும் விடுகிறார். உடலை அந்த நிலத்தில் புதைக்க சடங்குகள் செய்யும்போது வாங்கிய கடனுக்காக வங்கியே நிலத்தை ஜப்தி செய்ய வருகிறது. தந்தையின் உடலை புதைக்க முடியாததை அதிருப்தியுடன் பார்க்கும் கரசாமி (தனுஷ்) வங்கிக்கடனை அடைக்க அந்த வங்கியிலேயே கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். இத்திட்டம் என்ன ஆனது? திருந்தி வாழ நினைத்த தனுஷை சந்தர்ப்ப சூழ்நிலைகள் எங்கு கொண்டு சென்று நிறுத்துகின்றன? என்பதே கர.

Advertisement

இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் நேர்காணல்களே படத்திற்கான புரமோஷனையும் எதிர்பார்ப்பையும் பெரிதாக கொடுத்தது என்பதால் கர நிச்சயம் தனுஷுக்கும் அவருக்கும் திருப்புமுனையாக அமையலாம் என்ற ஆவல் எழுந்தது. வெறும் கிரைம் திரில்லராக மட்டும் இதனை எழுதாமல் உணர்வுகளை முன்னிறுத்தி, இப்படியொரு சூழல் அமைந்தால் யாரும் இதைத்தானே செய்வார்கள்? என்கிற கேள்வியை எழுப்பி அதற்கான தருணங்களையும் அடுத்தது என்ன என்கிற பரபரப்பையும் கோர்வையாக இயக்குநர் இணைத்திருக்கிறார். ஆனால், ஆரம்ப காட்சியிலிருந்த அழுத்தம் அடுத்தடுத்த காட்சிகளின் மீதான பரபரப்பாக மாறினாலும் இடைவேளைக் காட்சி வரை கதாபாத்திரங்களின் உணர்வுகளை மையமிட்டே செல்வதால் பெரிதாக எங்கும் ஒன்ற முடியவில்லை. இடைவேளைக் காட்சி பதற்றத்தைக் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டதால் இரண்டாம்பாதிக்கான உந்துதல்கள் இருந்தன. இருந்தும், கதையின் வலுவற்ற தன்மையால் நல்ல காட்சிகளும் தடுமாற்றம் அடைகின்றன.

அப்பா - மகனுக்கான உறவையும், தனுஷ் மீது சுராஜுக்கு இருந்த பழிதீர்க்கும் கோவத்தையும் இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக எழுதியிருக்கலாம். வங்கிகள் கொடுக்கும் கடன்களால் சாமானிய விவசாயிகள் படும் அவதி, நிலத்தின் மீதான ஏக்கம் ஆகியற்றை எழுத்தில் உணர்வுப்பூர்வமாகக் கொண்டு வராததால் தனுஷ் மேற்கொள்ளும் நியாயமான கொள்ளைச் சம்பவம் கூட பலத்தை இழக்கிறது. யாருக்காக இதனைச் செய்கிறாரோ அந்த சமூக கோவம் சரியாகப் பதிவாகவில்லை.

தட்டையாக மீண்டும் மீண்டும் இடம்பெறும் இடங்கள் சோர்வைக் கொடுக்கின்றன. இப்படத்திற்காக 40 ஏக்கரில் அன்றைய ராமநாதபுரத்தை செட் அமைத்திருந்தாலும் சில நெருக்கமான ஷாட்களில் அவை செட்கள் எனத் தெரிந்தது பலவீனமாக துருத்துகிறது. அதேநேரம், கலை இயக்குநர் மாயபாண்டியின் உழைப்பும் தெரிகிறது.

இந்த ஆழமில்லாத, அடுத்தது என்ன என்கிற அதீத பரபரப்பைக் கொடுக்காத கிரைம் திரில்லர் திரைக்கதையுடன் சேர்த்து மொத்த படத்தையும் தனுஷ்தான் தாங்குகிறார். திருடனாக, அப்பாவின் உடலைப் புதைக்க அலையும் மகனாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மனிதனாக என உடல்மொழியிலேயே தன் பரிணாமங்களைக் கடத்துகிறார். தனுஷின் நடிப்புக்கான தீணியாக இப்படம் அமையவில்லை என்றாலும் அவரால் பல காட்சிகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

முதல்முறையாக மமிதா பைஜூ கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். சில காட்சிகள்தான் என்றாலும் தன் கணவன் திரும்ப திருட்டை மேற்கொள்வது தெரிந்து உடைந்து அழும் காட்சியில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரேமலு மமிதாவை உடைக்கிறார். நடிகர் கேஎஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களைச் சிறப்பாக கையாண்டுள்ளனர். கேஎஸ் ரவிக்குமாரின் இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை என்பதால் இயல்பாகவே ரசிகர்களுக்கு உணர்வுகளைக் கடத்துகிறார். எந்தக் கதாபாத்திரத்திற்கும் ஏற்றவர் என்கிற எண்ணமே எழுகிறது.

உருவாக்க ரீதியாகவும் 1990-களின் ராமநாதபுர நிலத்திற்கே உண்டான வெக்கை தன்மை ஒளிப்பதிவில் நன்றாகக் கடத்தப்பட்டிருக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசைகள் பதற்றமான சூழல்களுக்குச் சரியாகக் கைகொடுத்து காட்சியின் அதிர்வுக்கு பலமாக அமைந்திருக்கின்றன.

நடிகர் தனுஷ் எந்தக் கதையிலும் தனக்கான அடையாளத்துடன் அதனை வேறொன்றாக மாற்றக்கூடியவராக வளர்ந்துவிட்டார். நடிப்பில் குறையில்லாமல் அக்காட்சிகளைக் காப்பாற்றுகிறார். ஆனால், கதை - திரைக்கதை சரியாக அமையாமல் என்ன செய்தாலும் அதன் முடிவு ஒன்றுதானே?

The film Kara, starring actor Dhanush, is released in theaters today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.