முகப்பு
திருவண்ணாமலை

மயானப் பகுதியில் பொதுமக்கள் மனிதச் சங்கிலி

திருவண்ணாமலையில் மயான பிரச்னைக்குத் தீர்வு கோரி, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமைமனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 15 மே, 2018 at 4:23 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருவண்ணாமலையில் மயான பிரச்னைக்குத் தீர்வு கோரி, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை
மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலை, தேனிமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள மயானத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மயானத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமான என தனி நபர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரச்னைக்குரிய இடம் மனுதாரர்களுக்கே சொந்தம் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, மயானத்தையும் அதையொட்டிய பட்டா நிலத்தையும் அளவீடு செய்ய கடந்த வெள்ளிக்கிழமை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான வருவாய்த் துறையினர் சென்றனர். அப்போது, மயானத்தை அளவீடு செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள வந்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் தேனிமலை பகுதி வழியாகச் செல்ல முயன்றனர்.
இதையறிந்த தேனிமலை பகுதி பொதுமக்கள் மயான பிரச்னைக்குத் தீர்வு கோரி, அமைச்சர் சென்ற காரை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்த போலீஸார் அமைச்சரை மாற்றுப் பாதையில் அழைத்துச் சென்றனர். எனவே, சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மயானப் பகுதியில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமியிடம் மனுஅளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.