திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 3 நாள்களாக பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டம்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து 3 நாள்களாக பயிற்சி பெறாமல் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து 3 நாள்களாக பயிற்சி பெறாமல் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 98 பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மருத்துவக் கல்லூரியின் அனைத்துத் துறைகளிலும் உள்ள புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் இந்த பயிற்சி மருத்துவர்கள் ஷிப்ட் முறையில் பணிபுரிந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் மருத்துவக் கல்லூரி விடுதியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் பயிற்சியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளி, சனிக்கிழமைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
இதற்கிடையே, ஒரு சில பயிற்சி மருத்துவர்கள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு வந்து, பயிற்சி பெற்றனர். பெரும்பாலானோர் பயிற்சி பெற வரவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை (செப்டம்பர் 3) முதல் ஒட்டுமொத்த பயிற்சி மருத்துவர்களும் தொடர் தர்னா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறியதாவது:
பயிற்சி மருத்துவர்களுக்கு இது பொன்னான காலம். அரசு செலவிலேயே படித்த இவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதைப் புரிந்து கொள்ளாமல் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் எத்தனை நாள்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ அத்தனை நாள்களுக்கு அவர்களது வருகைப் பதிவேட்டில் பயிற்சிக்கு வரவில்லை (ஆப்சென்ட்) என்று குறிக்கப்படும்.
பயிற்சியை நிறைவு செய்யும்போது, போதிய வருகைப்பதிவேடு இல்லாவிட்டால் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவர் சான்று பெற முடியாது என்றனர்.