திருவண்ணாமலை அருகே 11-ஆம் நூற்றாண்டு செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டெடுத்தது.
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டெடுத்தது.
திருவண்ணாமலையை அடுத்த செல்லங்குப்பம் கிராமம், பெரிய ஏரிக்கரையில் கல்செக்கு ஒன்றில் கல்வெட்டு இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வு நடுவத்தின் தலைவர் த.ம.பிரகாஷ், செயலர் ச.பாலமுருகன், இணைச் செயலர் பிரேம்குமார், மதன்மோகன், சேது, சுதாகர், ஸ்ரீதர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்தில் இருந்த செக்குக் கல்வெட்டை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், அந்தச் செக்குக் கல்வெட்டு 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. மேலும், கூரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெருவன் மகன் சேந்தன் என்பவர் இந்தச் செக்கை செய்து கொடுத்ததும் தெரிய வந்தது. இந்தச் செக்கில் ஆட்டப்படும் எண்ணெயில் ஒரு ஆழாக்கு எண்ணெய் மகாதேவர் என்ற இறைவனுக்கு வழங்க முறை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆழாக்கு எண்ணெய் என்பது நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய எண்ணெயின் அளவாகும். கல்வெட்டில் குறிக்கப்படும் மகாதேவர் என்பது சிவனைக் குறிக்கிறது. இதையடுத்து, அந்தப் பகுதியில் ஆய்வு நடுவக் குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட உள்ளனர்.