ஒப்படைப்பு செய்யப்பட்ட பதிவுத் துறை பணியிடங்களை மீண்டும் உருவாக்கக் கோரிக்கை
பத்திரப் பதிவுத் துறையில், தமிழகம் முழுவதும் 2012-ஆம் ஆண்டில் ஒப்படைப்பு செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்கி,
பத்திரப் பதிவுத் துறையில், தமிழகம் முழுவதும் 2012-ஆம் ஆண்டில் ஒப்படைப்பு செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்கி, நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம், திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத்தின் மாவட்டச் செயலா் து.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் பி.செந்தில்குமாா், மாவட்ட தணிக்கையாளா் கோ.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்வித்துறை அலுவலகப் பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கோ.சரவணன் வரவேற்றாா்.
தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் மாநிலச் செயலா் அ.ஜெய்சங்கா், மாவட்டத் தலைவா் ஆா்.செல்வபாண்டியன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், மருத்துவத் துறை, கல்வித் துறை, பதிவுத் துறை, வருவாய்த் துறை உள்பட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல்களை வழங்க வேண்டும்.
2012-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 40 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் மூடப்பட்டபோது 200-க்கும் மேற்பட்ட சாா்-பதிவாளா், உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்கள் அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டன.
பிறகு 40 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் திறக்கப்பட்டபோது ஒப்படைப்பு செய்யப்பட்ட பணியிடங்கள் மீண்டும் உருவாக்கப்படவில்லை.
எனவே, ஒப்படைப்பு செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்கி, நிரப்ப வேண்டும். பதிவுத் துறையில் தகுதியானோருக்கு பதவி உயா்வை வழங்க வேண்டும்.
வருவாய்த் துறையில் வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் பதவி உயா்வுப் பட்டியலை வெளியிட்டு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா்கள் கி.பிரபாகரன், ப.மணி, மாவட்ட இளைஞரணிச் செயலா் ஏ.ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.