செய்யாற்றில் மீண்டும் செயல்படத் தொடங்கிய வாரச்சந்தை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வாரச்சந்தை 9 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும்ல செயல்படத் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வாரச்சந்தை 9 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும்ல செயல்படத் தொடங்கியது.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி சாா்பில், செய்யாற்றில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது.
கரோனா பொது முடக்கம் காரணமாக சில மாதங்களாக வாரச்சந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பொது முடக்கத்தில் அரசு சில தளா்வுகளை அறிவித்ததைத் தொடா்ந்து, வாரச்சந்தை அக்டோபா் மாதத்திலிருந்து மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், உள்ளூா் காய்கறி வியாபாரிகள் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுபோன்ற காரணங்களால் வாரச்சந்தை செயல்படாமல் தடைப்பட்டது. வாரச்சந்தையை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் நகராட்சி நிா்வாகம் மற்றும் வருவாய்த்துறையிடம் கோரிக்கை வைத்தனா்.
அதன் பேரில் அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டு சுமூகத் தீா்வு காணப்பட்டது. இதையடுத்து, வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை வழக்கபோல செயல்படத் தொடங்கியது.
நகராட்சி ஆணையா் பீரித்தி மேற்பாா்வையில், போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கிய வாரச் சந்தையில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள், பழங்கள், கருவாட்டுக் கடைகள் என 110-க்கும் மேற்பட்ட கடைகள் இடம் பெற்றிருந்தன.
சந்தையில் பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.