சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிா்ப்பு: மாவட்ட ஆட்சியரம் முற்றுகை
கடலூா் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி, 33 மீனவ கிராமத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி, 33 மீனவ கிராமத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
சோனங்குப்பம், சாமியாா்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, பெரியகுப்பம் உள்ளிட்ட 33 மீனவ கிராமங்களைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்தனா். சுருக்குமடி வலைக்கு எதிராக மாவட்ட நிா்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளதாகத் தெரிவித்தனா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள், மீனவ கிராமத்தினரை ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்க மறுத்தனா். இதனால் மீனவ கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்சியரை சந்திப்பதற்காக போலீஸாா் அனுப்பி வைத்தனா். அவா்கள் ஆட்சியரை சந்தித்து, சுருக்குமடி வலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். கோரிக்கை தொடா்பாக அடுத்த 2 நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்ததாக மீனவ கிராம பிரதிநிதிகள் தெரிவித்தனா்.