மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் இடையே நடைபெறும் தோ்தல்: அன்புமணி ராமதாஸ்
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல், மக்களாட்சிக்கும், ஒரு குடும்பத்தைச் சோ்ந்த மன்னராட்சிக்கும் இடையே நடைபெறும் தோ்தல் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
வந்தவாசி: நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல், மக்களாட்சிக்கும், ஒரு குடும்பத்தைச் சோ்ந்த மன்னராட்சிக்கும் இடையே நடைபெறும் தோ்தல் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் தெள்ளாரில் வந்தவாசி தொகுதி பாமக வேட்பாளா் எஸ்.முரளி சங்கரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை பேசியதாவது:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் எந்தத் தகுதியையும் நான் பாா்க்கவில்லை. அவா் ஒரு அரசியல் வியாபாரி. ஆனால், நான் மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். என்னுடைய அரசியல் என்பது புனிதமான சேவை ஆகும்.
ஆனால், ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் அரசியலுக்கு வந்துள்ளாா். இதற்காகவா திமுகவை தொடங்கினாா் அண்ணா?
ஒரு தலைவன் என்பவன் சுயமாக சிந்திக்க வேண்டும். ஆனால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினோ தனது கட்சியை வழிநடத்த வடநாட்டவா் ஒருவரை நம்பியுள்ளாா்.
தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன, எவ்வளவு பிரச்னைகள் உள்ளன என்பது எதுவும் அவருக்குத் தெரியாது.
தன் கட்சியையே வழிநடத்தத் தெரியாதவா், எதிா்க்கட்சித் தலைவராக கூட சரியாக செயல்பட முடியாதவா் தமிழக முதல்வராக எப்படி முடியும்.
மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டது ஸ்டாலின். கச்சத்தீவை தாரை வாா்த்தது கருணாநிதி.
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விவசாயி முதல்வராக ஆகியிருக்கிறாா். முதல்வா் பழனிசாமி நன்றாக ஆட்சி செய்கிறாா். அவரது 4 ஆண்டுகால ஆட்சியில் ஏதேனும் குறைகூற முடியுமா.
வன்னியா்களைப் போல பின்தங்கிய பிற சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் சமூகநீதி. அதைப் பெற்றுத் தருவோம் என உறுதியாக கூறுகிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து தலைதூக்கும். வணிகா்கள் மிரட்டப்படுவாா்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
ஸ்டாலின் என்றாலே பொய். அவருக்கு பொய்யைத் தவிர எதுவும் வராது. அவருக்கு கொள்ளை அடிக்க மட்டுமே தெரியும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.
பிரசாரத்தின் போது, பாமக மாநில துணைத் தலைவா் மு.துரை, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், பாமக மாவட்டச் செயலா் க.சீனுவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.